Published : 25 Jun 2022 06:36 AM
Last Updated : 25 Jun 2022 06:36 AM

திருச்சி | விவசாயத்துக்கு ஒருநாளில் 16 மணிநேரம் மும்முனை மின்சாரம் வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருச்சி: விவசாயத்துக்கு ஒருநாளில் 16 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியது: காந்திப்பித்தன் (காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்): 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுகள், வாய்க்கால்களின் கரைகள் அகலமாக இருந்தன. தற்போது விவசாயிகள் தங்களின் வயல்களுக்கு உரங்களை கொண்டு செல்லக் கூட வாய்க்கால்களின் கரைகளை பயன்படுத்த இயலாத வகையில் குறுகிவிட்டன. இவற்றை அகலப்படுத்த வேண்டும்.

எம்.கணேசன் (பால் உற்பத்தியாளர் சங்கம்): தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டதால், கறவை மாடுகளை வைத்து பால் உற்பத்தித் தொழில் செய்யும் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர். எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

பி.அய்யாக்கண்ணு (தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்): விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறுகியகால கடன்களை மத்தியகால கடன்களாக மாற்றம் செய்து விட்டனர்.

மருதாண்டாக்குறிச்சி வாய்க்காலை தூர் வார வேண்டும். மோகனூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பி 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை விவசாயிகளுக்கு பணம் வழங்கவில்லை.

ம.ப.சின்னதுரை (தமிழக விவசாயிகள் சங்கம்): தமிழகத்தில் ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றை 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நில வரைபட அடிப்படையில் தூர் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திருச்சியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

அயிலை சிவசூரியன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): லால்குடி, உப்பிலியபுரம் பகுதிகளில் மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடையாகும் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். குத்தகைதாரர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் பயிர்க் கடன் வழங்கவேண்டும்.

பூ.விசுவநாதன் (ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்): தமிழக அரசு அறிவித்த குறுவைசாகுபடி தொகுப்பை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும். விவசாயத்துக்கு பகல் நேரத்தில் 10 மணி நேரம், இரவில் 6 மணிநேரம் என ஒருநாளில் 16 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கவேண்டும்.

விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலை விதைகள் வழங்க வேண்டும். தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்.

கவண்டம்பட்டி ஆர்.சுப்பிரமணியன் (டெல்டா விவசாயிகள் நலச்சங்கம்): உய்யக்கொண்டான் ஆற்றில் திருச்சி மாநகரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, ஆற்றை பாதுகாக்க வேண்டும்.

வி.சிதம்பரம் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): காவிரியில் வரும்உபரி நீரை மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும். திருவெறும்பூர் விளாங்குளம் பகுதியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீர்செய்ய வேண்டும்.

என்.வீரசேகரன் (பாரதிய கிசான் சங்கம்): காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கல்லணை மற்றும் முக்கொம்பு அணைகளுக்கு 5 கி.மீ சுற்றளவில் மணல் எடுப்பதை தவிர்க்கவேண்டும். ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்ட சூறைக்காற்றில் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.அபிராமி, வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் த.ஜெயராமன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைக் கட்டுமானத்துக்கான வரைவுத் திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகமும், காவிரி மேலாண்மை ஆணையமும் விவாதிக்க தடை விதிக்கவேண்டும்.

தமிழகத்தை பாலைவனமாக்க கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைக்கட்ட எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ஆட்சியர் அலுவலக வாயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x