

அரியலூர்: அரியலூரில் திருச்சி சாலையில் உள்ளகால்நடை மருத்துவ வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடம் ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக, ‘இந்து தமிழ்' நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது.
இதைத் தொடர்ந்து, புதிய கால்நடை மருத்துவமனைக் கட்டிடத்தை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று திறந்துவைத்தார்.
தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்திலுள்ள 1.64 லட்சம் மாட்டினங்கள், 2.50 லட்சம் ஆட்டினங்கள் மற்றும் இதர செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் வகையில் ரூ.1.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடம் மற்றும் ஆய்வக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ஹமீதுஅலி, பொதுப்பணித் துறைசெயற்பொறியாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கால்நடை மருத்துவமனையின் புதிய கட்டிடம் நேற்று திறக்கப்பட்டதால் பணிபுரியும் மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.