Last Updated : 23 May, 2016 11:53 AM

 

Published : 23 May 2016 11:53 AM
Last Updated : 23 May 2016 11:53 AM

நெல்லை தனித் தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுக

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனித் தொகுதிகளான வாசுதேவநல்லூர், சங்கரன்கோவிலில் அதிமுகவின் நிலைத்த செல்வாக்கு இத் தேர்தலிலும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

இத் தேர்தலில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் வாக்குகள் திமுக அணிக்கு கணிசமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இரு தனித் தொகுதிகளும் அதிமுக வசம் சென்றிருக்கிறது. அதிலும் இத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

வாசுதேவநல்லூர் தொகுதியில் 1967 முதல் 2011 வரையிலான 11 சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறையும், திமுக, மார்க்சிஸ்ட், தமாகா தலா 2 முறையும், மதிமுக, அதிமுக தலா ஒருமுறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

2006 தேர்தலில் மதிமுக வேட்பாளர் டி. சதன்திருமலைக்கு மாரும், 2011-ல் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். துரையப்பாவும் வெற்றிபெற்றிருந்தனர். கடந்த பல தேர்தல்களில் அதிமுக அல்லது அதன் கூட்டணி கட்சிகளே இத் தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளன.

இத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் அ. மனோகரன் வெற்றிபெற்றுள்ளார். இத் தொகுதியில் பரவலாக இருக்கும் தேவர் சமுதாய வாக்குகளும், குறிப்பிட்ட அளவுக்கு ஆதி திராவிடர் சமுதாய வாக்குகளும் கிடைத்தால் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்ததாக அக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். இத்தொகுதியில் அதிமுகவுக்கான வாக்கு வங்கி நிலையாக இருப்பது இத் தேர்தலிலும் நிரூபணமாகியிருக்கிறது.

மனோகரனை எதிர்த்து திமுக அணி சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் அன்பழகன் கூட்டணி பலத்துடன் களத்தில் இருந்தார். தொகுதியில் கணிசமாக உள்ள ஆதி திராவிடர் சமுதாயத்தினரின் வாக்குகளும், முஸ்லிம்களின் வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சியினர் நம்பினர். ஆனால், ஆதி திராவிடர் சமுதாயத்தினரின் வாக்குகள் பலவாறாக பிரிந்திருக்கிறது.

மேலும், அதிமுக வேட்பாளர் உள்ளூர்காரர், புதிய தமிழகம் வேட்பாளர் சென்னையில் தங்கியிருப்பவர் என்பதால் அதிமுக வேட்பாளருக்கே மக்களின் ஆதரவு இருக்கும் என்ற பேச்சு இருந்தது. இதுவும், புதிய தமிழகம் கட்சிக்கு பின்னடைவாக இருந்தது.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக இடையே மும்முனைப் போட்டி இருந்தது. ஆனால், இறுதியில் அதிமுக வென்றுள்ளது. இத்தொகுதியில் 1952 முதல் 2011 வரையில் நடைபெற்ற 14 தேர்தல்களில் 7 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸும் வெற்றி பெற்றிருக்கின்றன.

2006-ல் இத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி. கருப்பசாமி வெற்றி பெற்றிருந்தார். 2011 தேர்தலிலும் அவரே வெற்றிபெற்றார். பின்னர், ஓராண்டிலேயே உடல் நலக்குறைவால் அவர் காலமானதை அடுத்து 2012-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ். முத்துச்செல்வி வெற்றிபெற்றார்.

தற்போது நடைபெற்ற தேர்த லில் சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக இருந்த மு. ராஜலட்சுமி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

இத் தொகுதியை அதிமுக கோட்டை என்று அழைக்கும் வகையில் 1980, 1984, 1991, 1996, 2001, 2006, 2011 தேர்தல்களிலும், 2012 இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றிபெற் றுள்ளனர்.

இந்த முறை தொகுதியில் உள்ள தேவர், முதலியார், ஆதி திராவிடர் சமுதாய வாக்குகள் கைகொடுத்ததால் அதிமுக எளிதாக வெற்றிபெற்றுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார். வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இத் தொகுதிக் குள்தான் இருக்கிறது. ஆனாலும், மதிமுகவால் வெற்றிபெற முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x