Last Updated : 24 Jun, 2022 06:40 PM

 

Published : 24 Jun 2022 06:40 PM
Last Updated : 24 Jun 2022 06:40 PM

விவசாய மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல்: 6 மாதங்களாக காட்சிப் பொருளாக நிற்கும் மின்கம்பங்கள் - விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: மின் வாரியத்துக்கு தேவையான தளவாடப் பொருட்கள் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கடந்த 6 மாதங்களாக பல இடங்களில் மின்கம்பங்கள் மட்டுமே நடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார். அதன்படி, 2005-ம் ஆண்டு வரை சாதாரணப் பதிவு அடிப்படையில் பதிவு செய்த விவசாயிகள், 2011-ம் ஆண்டு வரை சுயநிதி திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் என 50 ஆயிரம் விவசாயிகளுக்கும், தத்கல் திட்டத்தில் பதிவு செய்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கும் என மொத்தம் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 2,581 மின் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த இரு மாதங்களுக்கு ஒரு முறை பணம் கட்டி பயன்படுத்திய விவசாயிகளின் இணைப்புகள், ஓரிரு மின்கம்பங்கள் மட்டும் புதிதாக நட்டு பயன்படுத்தும் இணைப்புகள் ஆகியவை மட்டும் வழங்கப்பட்டன. மற்ற இணைப்புகள் வழங்கப்படவில்லை.

பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் மட்டுமே நடப்பட்டுள்ளன. மின் கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் இல்லாததால் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடன் வாங்கி செலவு: இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட மானாவாரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் து.வைத்திலிங்கம் கூறியது: "பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்த நிலையில், தமிழக முதல்வர் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவித்ததை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றோம்.

இதையடுத்து, மின் வாரியத்திலிருந்து வந்த அறிவுறுத்தல் கடிதத்தில் கேட்ட பல்வேறு ஆவணங்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என கூறியிருந்ததால், பல நாட்களாக அலைந்து பெற்று ஒப்படைத்தோம். பின்னர், மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து, உடனடியாக மேற்கூரையுடன் கூடிய ஷெட் அமைக்க வேண்டும், வயரிங் செய்ய வேண்டும் என்றனர். அதன்படி நாங்களும் கடன் வாங்கி பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஷெட் அமைத்து, வயரிங் பணிகளையும் மேற்கொண்டோம். ஆனால், மின் வாரிய பணியாளர்கள் பல இடங்களில் மின்கம்பங்களை மட்டுமே நட்டுள்ளனர். அதன்பின் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. அந்த மின் கம்பங்களும் 6 மாத காலமாக காட்சிப் பொருளாக உள்ளன.

மின்வாரிய அதிகாரிகளை அணுகி கேட்டபோது, தற்போது மின்கம்பி உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் எதுவும் கையிருப்பில் இல்லை, வந்ததும் மின் இணைப்பு வழங்குகிறோம்" என கூறினர்.

இதனால் விவசாயிகள் பல இடங்களில் கடனை வாங்கி செலவு செய்தும் மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர்" என்றார்.

பலமுறை கடிதம்: இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மின் வாரிய உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது: "கஜா புயல் பாதிப்பின் போது வெளி மாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு லட்சக்கணக்கான மின் கம்பங்கள் வந்ததால், தற்போது கையிருப்பில் மின் கம்பங்கள் மட்டுமே உள்ளன.

மின்கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் ஏதும் இல்லாததால் மின் இணைப்புகள் வழங்க முடியவில்லை. அதேபோல, மின்மாற்றிகளையும் புதிதாக நிறுவ முடியவில்லை. இதனால், விவசாயிகள் தினமும் எங்களை தொடர்பு கொள்ளும்போது, எங்களுக்கு தர்மசங்கடமாக உள்ளது. நாங்களும் உயர் அதிகாரிகளுக்கு தளவாடப் பொருட்கள் கேட்டு அதற்கான கடிதங்களை பலமுறை அனுப்பியும் இதுவரை பொருட்கள் கிடைக்கவில்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x