Published : 24 Jun 2022 04:26 PM
Last Updated : 24 Jun 2022 04:26 PM

ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

சென்னை: “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 25) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ். 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியினை நாளை (ஜூன் 25) காலை 9 மணிக்கு சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

இவ்விழாவில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் சிறப்பம்சங்கள்:

> இத்திட்டத்தின் நோக்கம், மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

> கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

> புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

> இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.

> இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

> HCL நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

> HCL நிறுவனம் 2500 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், இப்பயிற்சிக்கான முழு செலவினையும் அரசே ஏற்கும் எனவும், அம்மாணவர்கள் பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பும் வழங்கப்படும் எனவும் உறுதி செய்யப்படவுள்ளது.

> மேலும், இதனைத் தொடர்ந்து “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, ஜூன் 30, ஜூலை 1, ஜூலை 2 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி கணேசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதின், காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், பள்ளிகல்வித்துறை ஆணையர் க. நந்தகுமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ. இன்னசென்ட் திவ்யா செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன்,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x