Published : 24 Jun 2022 05:13 AM
Last Updated : 24 Jun 2022 05:13 AM
சென்னை: தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில், பாண்டியன், பொதிகை உட்பட முக்கிய ரயில்களின் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளின் இடங்கள் 2 நிமிடங்களில் நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள், ஆண்டுதோறும் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக ரயில்கள், பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்வார்கள். நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். அதனால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவர்.
ரயில்களில் பயணிக்க 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக். 24-ம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய இரு நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால் அக். 21-ம் தேதியே சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அக். 21-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 5 நிமிடத்தில் முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, மலைக்கோட்டை, முத்துநகர், கன்னியாகுமரி ஆகிய விரைவு ரயில்களில் அடுத்தடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘முன்பதிவை பொறுத்தவரை 80 சதவீதம் டிக்கெட்கள் இணையவழி மூலமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அக். 22-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூன் 24) காலை 8 மணிக்கு தொடங்குகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT