Published : 24 Jun 2022 06:18 AM
Last Updated : 24 Jun 2022 06:18 AM

எதிர்ப்பு முதல் சாப்பாடு வரை - அதிமுக பொதுக்குழு துளிகள்

எதிர்ப்பு: கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 9 மணிக்கு பிரச்சார வாகனத்தில் புறப்பட்டு அண்ணா நகர், நொளம்பூர் வழியாக 10.25 மணிக்கு மண்டப வளாகத்துக்குள் நுழைந்தார். அவரது வாகனம் நின்றதும், ‘‘இது இபிஎஸ் வாகனம் நிறுத்துவதற்கான இடம். இங்கு உங்கள் வாகனத்தை நிறுத்தக் கூடாது’’ என்று கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், உடனடியாக ஓபிஎஸ்ஸை இறக்கிவிட்டு, அவரது வாகனம் அங்கிருந்து நகர்ந்தது.

உள்ளே வந்த ஓபிஎஸ்ஸை ஒருசில நிர்வாகிகள் வரவேற்றனர். அவர் பொதுக்குழு அரங்கத்துக்குள் வந்து அமர்ந்தபோது, வெளியேறுமாறு கூறி சில உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அதன்பிறகு, இபிஎஸ் வரும்வரை அங்குள்ள அறையில் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார்.

வரவேற்பு: இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றபடி, 3.20 மணி நேரம் பயணித்து காலை 11.20-க்கு மண்டபத்தை வந்தடைந்தார்.

முன்னாள் அமைச்சர்கள், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பூச்செண்டு கொடுத்து அவரை வரவேற்றனர். போலீஸார், பவுன்சர்கள் பாதுகாப்புடன் அரங்குக்குள் அவர் 11.30-க்கு வந்தார்.

அப்போது, தொண்டர்கள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இபிஎஸ்ஸை வரவேற்க வந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் இந்த நெரிசலில் சிக்கிக்கொண்டதால், அவரது காலில் லேசான காயம் ஏற்பட்டது.

கோஷம்: ஓபிஎஸ் ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மேடையில் அமர்ந்தபோது, அவர்களையும் கீழே இறங்கச் சொல்லி பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் கோஷமிட்டனர். அப்போது, பா.வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், தளவாய் சுந்தரம் ஆகியோர், ‘‘நீதிமன்ற உத்தரவின்பேரில் கூட்டம் நடக்கிறது. அமைதியாக இருங்கள்’’ என்று கூறி, அவர்களை அமைதிப்படுத்தினர்.

பிற்பகல் 12.14-க்கு மண்டபத்தைவிட்டு ஓபிஎஸ் புறப்பட்டார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள், ‘‘ஓபிஎஸ் ஒழிக, துரோகி’’ என கோஷமிட்டனர். ஓரிரு இடங்களில் ‘‘ஓபிஎஸ் வாழ்க’’ என்ற கோஷத்தை கேட்க முடிந்தது. பிற்பகல் 12.25-க்கு இபிஎஸ் புறப்பட்டார். அவரை வழியனுப்ப வழிநெடுகிலும் தொண்டர்கள் பூக்களுடன் காத்திருந்தனர்.

பாதுகாப்பு: பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வானகரம் பகுதி, ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்டது. ஆனாலும், நிகழ்ச்சியின் முக்கியத்துவம் கருதி சென்னை போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து, அதிவிரைவுப்படை, ஆயுதப்படை போலீஸார் என சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சாதாரண உடையில் இருந்த போலீஸாரும் கூட்டத்துக்குள் புகுந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.1,000-க்கும் அதிகமான பவுன்சர்கள், தனியார் பாதுகாவலர்களும் சபாரி உடை அணிந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளின் அடையாள அட்டைகளை பரிசோதித்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பினர். நுழைவுவாயில்களில் நின்றபடி, உறுப்பினர்கள் தவிர மற்றவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர்.

தள்ளுமுள்ளு: நிகழ்ச்சி நடந்த மண்டபத்துக்குள் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

உள்ளே ஓபிஎஸ்ஸுக்கு எதிராக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதை, மண்டபத்துக்கு வெளியே நின்றிருந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் கேமரா, செல்போனில் படம் பிடித்தனர்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி மூலம் நேரலையாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையறிந்த அதிமுகவினர், வீடியோ எடுப்பதை தடுத்தனர். செய்தியாளரை பார்த்து கட்சி நிர்வாகி ஒருவர், ‘அடித்து விரட்டுவோம்’ என்று கூறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சாப்பாடு: பொதுக்குழு கூட்டத்தில் 2,665 உறுப்பினர்கள் பங்கேற்றனர். பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து, காலை சிற்றுண்டி, மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை சிற்றுண்டியாக பைனாப்பிள் கேசரி, இட்லி, பொங்கல், மெதுவடை, சாம்பார், 2 வகை சட்னி, டீ, காபி வழங்கப்பட்டன. மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, காலிபிளவர் ஃப்ரை, முட்டைக்கோஸ் பொரியல், அவியல், பருப்பு வடை, ஜாங்கிரி, அப்பளம், பழம், பாயசம் பரிமாறப்பட்டன.

சோதனை: சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபம் உள்ள பகுதியில் நேற்று காலை 6 மணி முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். மண்டபம் உள்ள சாலையில் 3 அடுக்கு தடுப்புகள் அமைத்து, பலத்த போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடும் சோதனைகளுக்கு பிறகே பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வந்தபோது, தவில் - நாதஸ்வரம், நாசிக் டோல், பேண்டு வாத்தியம், கேரள செண்டை மேளம், பம்பை ஆகிய இசைக் கருவிகளை இசைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா, எம்ஜிஆர் போல வேடம் அணிந்த கலைஞர்கள், மண்டபத்துக்கு வெளியே காத்திருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x