ஜனநாயகமின்றி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம்; தீர்மானம் ரத்து செய்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வைத்திலிங்கம் தகவல்

அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையில் இருந்து வெளியேறும்போது, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மைக்கில் பேச முற்பட்டார். அப்போது, அவர் பேசக் கூடாது என கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கோஷமிட்டார். உடன், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர். படங்கள்: ம.பிரபு
அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையில் இருந்து வெளியேறும்போது, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மைக்கில் பேச முற்பட்டார். அப்போது, அவர் பேசக் கூடாது என கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கோஷமிட்டார். உடன், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர். படங்கள்: ம.பிரபு
Updated on
2 min read

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்இல்லத்தில், செய்தியாளர்களிடம் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் நேற்று கூறியதாவது:

அதிமுக பொதுக்குழுவில் 23தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்றுதான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இக்கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் ரத்து செய்துவிட்டனர். அவற்றை ரத்து செய்யஇவர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

கூட்டத்தில் அவைத் தலைவரை தேர்ந்தெடுத்ததும் செல்லாது. அதிமுக அவைத் தலைவர் என்பவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இதற்கு முன்பு கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்தான் அறிவித்தனர். அதுதான் நடைமுறை. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அவைத் தலைவரை அறிவிக்க வேண்டும்.

23 தீர்மானங்களை ரத்து செய்யும்போது, அந்த பொதுக்குழு உறுப்பினர்களும் ரத்தாகிவிட்டார்கள். அதன் பிறகு எப்படி அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தீர்கள்.

பதவி வெறி அவர்களது அறிவை மயக்கிவிட்டது. சட்டத்தை மறந்து, நீதிபதிகளின் உத்தரவை மறந்து, அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது. அதை மக்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள்.

மாநில அளவில் அமைப்புத் தேர்தலை நடத்தி அதற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தையே ரத்து செய்துள்ளனர். அதனால் அந்த உட்கட்சி தேர்தலே ரத்தாகிவிடும். இந்த பொதுக்குழுவே செல்லாது.

பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குதான் அதிகாரம் உள்ளது. அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியமே இல்லை. அப்படி கூடினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம்.

பொதுக்குழு நடத்த வேண்டும் என்று, சில உறுப்பினர்களிடம் பணம்கொடுத்து கையெழுத்து பெற்றுள்ளனர். சிலவற்றில் போலியாக கையெழுத்து போடப்பட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பொதுக்குழு எவ்வளவு அமைதியாக, அழகாக, கட்டுப்பாட்டுடன், ஜனநாயக முறைப்படி இருக்கும். இன்று கட்டுப்பாடு, ஜனநாயகம் இல்லாத, மோசமான பொதுக்குழு நடந்திருக்கிறது. எப்படி நடத்த வேண்டும் என்று தெரியாமல் விபரீதஎண்ணங்கள் உதயமாகி ஓரங்க நாடகமாக நடத்திவிட்டனர்.

எங்கள் ஒருங்கிணைப்பாளர் பேச்சுவார்த்தைக்கு என்றுமே தயாராக உள்ளார். கட்சி நன்றாக இருக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். ஜெயலலிதா எண்ணப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும். கூட்டு தலைமைதான் கட்சி வளர்ச்சிக்கு உகந்தது என்பதுதான் ஓபிஎஸ் கருத்து. அதை இபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொண்டால் சிறப்பாக கட்சியையும், எதிர்காலத்தில் ஆட்சியையும் நடத்த வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in