Published : 24 Jun 2022 08:12 AM
Last Updated : 24 Jun 2022 08:12 AM

பேருந்தை கடத்தியதாக திருச்சி சிவா எம்.பி.யின் மகன் கைது: பாஜக முற்றுகை போராட்டம்

திருச்சி: தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்தைக் கடத்திச் சென்றதாக திருச்சி சிவா எம்.பி.யின் மகனும், பாஜக நிர்வாகியுமான சூர்யா சிவாவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திமுக மாநிலங்களவை குழுத்தலைவரும், கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக, சோமரசம்பேட்டை அருகேஉள்ள வாசன்வேலி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார்.

இவர், அண்மையில் திமுகவில்இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இவர் கடந்த 11-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்து சூர்யா சிவாவின் கார் மீது மோதியது. இதுதொடர்பாக திருநாவலூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சேதமடைந்த காரை சீரமைத்துத் தருவதற்கான தொகையை பங்கிட்டுக் கொள்வதாக தனியார் பேருந்து நிறுவனத்தினர் சூர்யா சிவாவிடம் கூறியதாக தெரிகிறது. அதன்பேரில் சூர்யா சிவா தனது காரை பழுதுநீக்க கொடுத்துள்ளார்.

அதன்பின், காரை சீரமைப்பதற்கான செலவுத்தொகையை கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சூர்யா சிவா தனது ஆதரவாளர்களுடன் சென்று, கடந்த 19-ம்தேதி திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்நிறுவனத்தின் மற்றொரு பேருந்தை எடுத்துச் சென்று சோமரசம்பேட்டை பகுதியில் தனதுவீட்டருகே நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நிறுவனத்தினர், தங்களது பேருந்தை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சூர்யா சிவாவை நேற்று மாலை கைது செய்தனர்.

தகவலறிந்த பாஜகவினர் சூர்யா சிவாவுக்கு ஆதரவாக கன்டோன்மென்ட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அமைச்சர்கள் மீது புகார்

கைதுக்கு முன்பு சூர்யா சிவா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தனியார் பேருந்து நிறுவனத்துக்கு ஆதரவாக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் தூண்டுதலின்பேரிலேயே என் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருப்பேன். அளவு கடந்துவிட்டால், அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன். கட்சி மாறியதால் காழ்ப்புணர்ச்சி காரணமாகவழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. அதற்காக திமுக மீதான விமர்சனங்களை நிறுத்த மாட்டேன். வழக்கை சந்திக்க தயார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x