

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நுழைவு வாயிலில் நகராட்சி சார்பில் பிரம்மாண்ட மஞ்சள் பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான, ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழக முதல்வர் ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கணிசமாக குறைக்கும் நோக்கத்துடன் இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 28-ம் ஆண்டு மாங்கனி கண்காட்சி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இங்கு தினமும், பொதுமக்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மாங்கனி கண்காட்சி நிறைவுபெறும் வரை அதிக மக்கள் வருகை தருவர் என்பதால் அப்பகுதியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, மாங்கனி கண்காட்சி நுழைவு வாயில் பகுதியில் பிரம்மாண்ட மஞ்சள் பை ஒன்றை உருவாக்கி விழிப்புணர்வுக்காக வைத்துள்ளனர்.
46 அடி உயரம், 20 அடி அகலம் கொண்ட இந்த மஞ்சள் பை 1050 மீட்டர் துணி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. மாங்கனி கண்காட்சிக்கு வருகை தரும் பலரும், இந்த பிரம்மாண்ட மஞ்சள் பை வைக்கப்பட்டுள்ள பகுதியில் நின்று ‘செல்ஃபி’ எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.