

சென்னை: பள்ளிக்கு குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் போக்குவரத்து விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விபத்து உயிரிழப்புகளை குறைக்கவும், நெரிசலை தடுக்கவும் சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்களில் பலர், சாலை விதிமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை பெருநகர் முழுவதும் உள்ள 255-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கடந்த 20-ம் தேதி போக்குவரத்து போலீஸார் சிறப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.
இந்நிலையில், அனைத்து வாகன ஓட்டிகளும் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது போக்குவரத்து விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி குழந்தைகளின் பாதுகாப்புக்காக, போக்குவரத்து ஒழுக்கத்தை பின்பற்றுவதில் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.