Published : 24 Jun 2022 06:13 AM
Last Updated : 24 Jun 2022 06:13 AM

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ‘ஈஸிசெக் பிரெஸ்ட்’ பரிசோதனை: அப்போலோ - டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் இணைந்து அறிமுகம்

அப்போலோ புற்றுநோய் மையம் - டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் இணைந்து ‘ஈஸிசெக் பிரெஸ்ட்’ பரிசோதனை முறையை அறிமுகம் செய்யும் விழாவில் பரிசோதனைக்காக ரத்தம் வழங்குகிறார் அப்போலோ மருத்துவமனை செயலாக்க துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி.

சென்னை: உலகளவில் பெண்கள் மத்தியில் மிகப் பொதுவான நோய் பாதிப்பாக மார்பக புற்றுநோய் இருக்கிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த புற்றுநோய் நேர்வுகளில் மார்பக புற்றுநோயின் பங்கு 13.5 சதவீதம் மற்றும் அனைத்து உயிரிழப்புகளில் இதன் பங்கு 10.6 சதவீதமாக இருக்கிறது.

இந்தியாவில் தனியார் துறையில் மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனையாகத் திகழும் அப்போலோ புற்றுநோய் மையங்கள், புற்றுநோய் சிகிச்சையில் மிக நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தற்போது அறிகுறி தென்படாத நபர்களிடம் உயர் துல்லியத்துடன் ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயைக் கண்டறியக்கூடிய ரத்தப் பரிசோதனையை டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் ஒத்துழைப்போடு வழங்குகிறது. இதன்மூலம் உரிய நேரத்தில் நோயறிதலும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான சிகிச்சை வழங்குவதும் சாத்தியமாகும்.

ரத்தப் பரிசோதனை மூலம் மிக எளிதான முறையில் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனைகளைப் பெண்கள் செய்துகொள்ளலாம்.

‘ஈஸிசெக் பிரெஸ்ட்’ பரிசோதனை முறையில் மிகச்சிறிய அளவு ரத்தத்தை எடுத்துக்கொண்டு புற்றுநோய் வளர்ச்சியில் முதல் கட்டத்துக்கு முன்னதாகவே மார்பகப் புற்றுநோயைக் கண்டறியலாம்.

நாடெங்கிலும் அனைத்து அப்போலோ புற்றுநோய் மையங்களிலும் ஜூன் 22-ம் தேதி முதல் ஈஸிசெக் பிரெஸ்ட் பரிசோதனை நடைபெறும்.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறும்போது, “உரிய நேரத்துக்குள் நோயறிதலையும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான சிகிச்சையையும் உறுதி செய்கின்ற தரமான தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற இலக்கை நோக்கிய குறிக்கோளில் ஒரு முக்கியமான நிகழ்வாக ‘ஈஸிசெக் பிரெஸ்ட்’ இருக்கிறது” என்றார்.

டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர் ராஜன் டாட்டர் கூறும்போது, “ஈஸிசெக் பிரெஸ்ட் என்பது, சர்வதேச ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க ஒத்துழைப்புக்காக பல ஆண்டு உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, மக்கள் மீதான ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதன்மூலம் வெற்றிகரமான சிகிச்சை வாய்ப்புகளும், பாதிப்பிலிருந்து மீண்டு உயிர் பிழைப்பதற்கான விகிதாச்சாரமும் பெரிய அளவில் அதிகரிக்கும்” என்று கூறினார்.

அப்போலோ மருத்துவமனை செயலாக்க துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறும்போது, “இந்தியாவில் ஏறக்குறைய 70 சதவீத பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு வளர்ந்து முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது.

90 சதவீத துல்லியத்துடன் மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலையைக் கண்டறிகின்ற இந்த புரட்சிகர பரிசோதனை திட்டத்தின் மீது டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் உடன் ஒத்துழைப்பை மேற்கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x