Published : 24 Jun 2022 07:12 AM
Last Updated : 24 Jun 2022 07:12 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட போரூர் ஏரி அருகே ரூ.100 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்புபணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை தொடங்கி அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது: சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம் காரம்பாக்கம் மற்றும் போரூர்கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் தெள்ளியகரம் கிராமத்திலும் போரூர் ஏரி அமைந்துள்ளது.
தற்போது பல்வேறு காரணங்களால் ஏரியின் உபரிநீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் உள்ளது. இதனால் இந்த ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர் மற்றும் அய்யப்பன்தாங்கல் கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் போரூர் ஏரியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க போரூர் ஏரியின் உபரி நீர் கால்வாய் மேம்படுத்தப்பட உள்ளது.
குன்றத்தூர் வட்டம் கொளுத்துவான்சேரி சாலையில் தந்தி கால்வாயில் இருந்து போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் செல்லும் இடம் வரை புதிய மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
போரூர் ஏரியில் புதிய மதகுகள் அமைத்தல் மற்றும் போரூர் ஏரியில் இருந்து ராமாபுரம் ஓடை வரை மூடிய வடிவிலான கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளும்மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால்குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காமல்மக்கள் பாதுகாக்கப்படுவர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மாவட்டஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் சி.பொதுப்பணி திலகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித் துறைஅலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சென்னை ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் வீராங்கால் ஓடையை சீரமைக்கும் பணிகளையும் நேற்று அமைச்சர் தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT