Published : 16 May 2016 08:24 AM
Last Updated : 16 May 2016 08:24 AM

வாக்களிப்பதில் சிரமமா?

வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் நேரத்தில் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் பற்றி வாக்காளர்கள் பலர் தங்கள் அனுபவங்களை ‘தி இந்து’ நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர். அவற்றில் சில பிரச்சினைகள் பற்றி தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை பெற்றுள்ளோம். பிரச்சினைகளும் அதற்கான விளக்கங்களும் வருமாறு:

1. அப்துல் காதர் ஜெயிலானி - புவனகிரி

சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை படிப்பு படிக்கும் வெளியூர் மாணவர்களுக்கு, தேர்தலுக்காக விடுப்பு வழங்கப்படுவதில்லை. அவர்கள் வாக்களிக்க அஞ்சல் ஓட்டுகள் வழங்கப்படுமா?

தேர்தல் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே அஞ்சல் ஓட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது.

2. பி.முத்துராமன் - திருநெல்வேலி

வாக்குச் சாவடி முகவர்கள் வாக்குச் சாவடியினுள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். தற்போது வாக்காளர் சீட்டு, வாக்காளர் அட்டைகள் உள்ள நிலையில் வாக்குச்சாவடி முகவர் முறையை அகற்ற முடியுமா?

வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. முகவர்கள் வாக்காளர் பெயர் விவரங்களை சரிபார்த்து, அந்த நபர்தானா என்பதை உறுதி செய்யவே பணியமர்த்தப்படுகின்றனர். கட்சியினர் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் வாக்கு சேகரிக்கலாம்.

3. எஸ்.மேகலா - சூலூர் தொகுதி

வாக்காளர் பட்டியலில் எனது பெயர் உள்ளது. என்னிடம் வாக்காளர் அட்டை இல்லை. கடந்த தேர்தலின்போது, வாக்காளர் சீட்டு கொடுத்தார்கள். இந்த முறை அதுவும் கொடுக்கவில்லை. நான் வாக்களிக்க முடியுமா?

வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களின் வரிசை எண், பாகம் எண்ணை தெரிந்து கொண்டு அதை வாக்குச்சாவடி அலுவலரிடம் கூறி, தேர்தல் ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.

4. எம்.முத்துலட்சுமி - ஓசூர்

எஸ்எம்எஸ் மூலமாக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடி எண் மற்றும் முகவரியை தெரிந்துகொள்ளும் வசதிகள் உண்டா?

தெரிந்து கொள்ளலாம். 1950 என்ற எண்ணுக்கு அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். கூகுள், விண்டோஸ், ஆப்பிள் இயங்குதளம் உள்ள கைபேசியில் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியை பதிவிறக்கம் செய்து, வாக்குச்சாவடி அமைவிடத்தை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம்.

5. பி.அருள்செல்வம் - புவனகிரி

அரசு ஊழியர்களின் அஞ்சல் வாக்குகள் குறிப்பிட்ட இடத்தில்தான் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். எங்கள் வாக்குகள், வாக்கு எண்ணிக்கையில் சேர்க்கப்படுமா?

அரசு ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்குகளை, அஞ்சல் வழியிலும் அனுப்பலாம். சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள பெட்டியில் போடலாம். 19-ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் அஞ்சல் வாக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x