

தமிழ்நாட்டில் தனிக்கட்சி ஆட்சி முடிந்து கூட்டணி ஆட்சி அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாபுவேல் முருகனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு பேசும்போது, ‘கடந்த 22 ஆண்டுகள் நடந்த அதிமுக, திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை கிரானைட்டில் மட்டும் 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள் ளது.
குறிப்பாக போக்குவரத்துத் துறையில் நடத்துநர் பணிக்கு ரூ.4 லட்சம், மெக்கானிக் பணிக்கு ரூ.7 லட்சம், கல்லூரிப் பேராசிரியர் வேலைக்கு ரூ.30 லட்சம், துணைவேந்தர் பதவிக்கு ரூ.10 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளனர்.
ஜெயலலிதா தவறு செய்தால் அந்தக் கட்சியினர் சுட்டிக்காட்ட முடியுமா? திமுக தலைவர் தவறு செய்தால் அந்தக் கட்சியினர் சுட்டிக்காட்ட முடியுமா? ஆனால், தேமுதிக மக்கள் நலக் கூட்டணி யில் 6 கட்சிகள் இருக்கின்றன. ஒரு கட்சி தவறு செய்தாலும் மற்ற 5 கட்சிகளும் சுட்டிக் காட்டு வார்கள்.
தமிழ்நாட்டில் தனிக்கட்சி ஆட்சி சகாப்தத்துக்கு முடிவுகட்டி கூட்டணி ஆட்சி அமையும். மதுரை கிரானைட் ஊழலில் நேர்மையான அதிகாரியாக சகாயம் செயல்பட்டார்.
கிரானைட் ஊழலை எடுத்துக் காட்டினார். ஆனால், சகாயத்தை பாராட்டாமல் ஜெயலலிதா பழி வாங்கினார். உயர்நீதிமன்றம் மீண்டும் சகாயத்தை நியமனம் செய்தது. சுடுகாட்டில் படுத்துக் கிடந்து மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகளை சகாயம் வெளியே கொண்டு வந்தார்’ என்றார்.