

நுழைவுத் தேர்வை ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என ஜெயலலிதா மீது திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்த தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நுழைவுத் தேர்வு தொடர்பான பிரச்சினை பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. அப்போதெல்லாம் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் வந்துவிட்டது என்பதால் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என பேசியிருக்கிறார். நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான அவசர சட்டத்தை ஏற்கெனவே பிறப்பித்திருந்தால் யாரும் எதிர்க்கப் போவதில்லை.
தற்போதுகூட உச்ச நீதிமன்றத் தில் நடந்து வரும் நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கில் மற்ற மாநிலங்கள் எழுத்துபூர்வமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஆனால், தமிழக அரசின் சார்பில் எழுத்து பூர்வமான எதிர்ப்பை தாக்கல் செய்யவில்லை.
முக்கியமான இந்த வழக்கில் தமிழக அரசை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யாதது ஏன்? தமிழக அரசுக்காக வழக்கறிஞர் குறுக்கிட்டு பேசியதை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ளார். கடந்த 2006-ல் நுழைவுத் தேர்வை ரத்துசெய்து தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டம் பற்றி கேள்வி கேட்கவோ, நீர்த்துப் போகச் செய்யவோ முடியாது. இது பற்றி தமிழக அரசின் சார்பில் எழுத்துபூர்வமாக மனு தாக்கல் செய்யவில்லை.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற தமிழக அரசின் சட்டத்தை மத்திய அரசின் சட்டமும், ஒழுங்குமுறை ஆணைகளும் கட்டுப்படுத்த முடியாது என்பதை தமிழக அரசு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தலுக்காக எதேதோ பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.