Published : 23 Jun 2022 08:56 PM
Last Updated : 23 Jun 2022 08:56 PM

என்எஸ்சி போஸ் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை பிராட்வே பகுதி நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காதவாறு அதிரடி சோதனை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை 2016-ம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அவகாசம் வழங்கியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "தற்போது வரை நடைபாதை அக்கிரமிப்புகள் அகற்றபடவில்லை" எனக் கூறி, அதற்கான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி தரப்பில் அக்கிரமிப்புகள் அகற்றபட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “வரும் திங்கட்கிழமை முதல் அடுத்த ஞாயிற்றுகிழமை வரை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். அந்த 7 நாட்களுக்கான சிசிடிவி பதிவுகளையும் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x