Published : 23 Jun 2022 03:48 PM
Last Updated : 23 Jun 2022 03:48 PM

சென்னை பெரும்பாக்கத்தில் குப்பை மேடாக மாறிவரும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இடம் இப்போது குப்பை மேடாக மாறி வருகிறது.

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவததை தவிர்க்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தி குப்பை தரம் பிரித்து அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த மே 27-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடமிருந்து 3.85 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதையும் மீறி பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாக்கம் பகுதியில் நூக்கம்பாளையம் சாலையில் ஜுஸ் கார்டன் என்ற கடைக்கு அருகில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, தொல்லியல் துறையின் பலகைக்கு அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜீயோ டாமின் என்பவர் கூறுகையில், "இந்த வனப்பகுதியில் மயில்கள், குரங்குகள், கீரிகள் உட்பட ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன. ஆனால், தற்போது குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. ஒருபுறம் ‘பாதுகாக்கப்பட்டப் பகுதி’ என்று அறிவிக்கும் தொல்பொருள் துறையின் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு அருகில் குப்பை கொட்டப்படுகிறது" என்றார்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் கூறுகையில், “தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடத்தில் குப்பை கொட்டுவது தொடர்பாக கேட்டால் "அது நல்ல இடம் சார், யாருக்கும் தொந்தரவில்லாத ஒதுக்குப்புறம், அதனாலதான் அங்க கொட்டுறோம்" என்று குப்பை சேகரிக்கும் நபர் கூறுகிறார்” என்று தெரிவித்தார்.

இந்த பகுதி மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் எதிர்காலத்தில் அகழ்வாய்வு செய்ய வாய்ப்பு உள்ள பகுதியாக கருதி இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஆர்கியாலஜி சர்வே ஆப் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x