Published : 23 Jun 2022 05:08 AM
Last Updated : 23 Jun 2022 05:08 AM

மேகேதாட்டு அணை விவகாரம் | காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை - மத்திய அமைச்சரிடம் தமிழக தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. ஆணைய கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கக் கூடாது என்று மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் துரைமுருகன் தலைமையிலான தமிழக சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் குழு மனு அளித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை மற்றும் நீர்மின் திட்டம் அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கி, அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்துக்கு தமிழக அரசு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக அரசு பலமுறை கோரிய போதும், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தியது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அளித்த ஆலோசனைப்படி, அடுத்து நடக்கவுள்ள கூட்டத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால், மேகேதாட்டு குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மேகேதாட்டு அணை விவகாரத்தில் முடிவு எட்டப்படும்வரை, காவிரி மேலாண்மை ஆணையத்தில் அதுபற்றி விவாதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதேநேரத்தில் கர்நாடக முதல்வர் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசிவருகிறார்.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் குழு டெல்லி சென்று,மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மு.தம்பிதுரை (அதிமுக) ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். அதைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்டவர்களும் சென்றனர்.

அங்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை தமிழக குழுவினர் நேற்று பிற்பகல் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் துரைமுருகனுடன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் மு.தம்பிதுரை (அதிமுக), வைகோ (மதிமுக), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), தி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), பி.சண்முகம் (மார்க்சிஸ்ட்), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), சின்ராஜ் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக), எம்.ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), நீர்வளத் துறைசெயலர் சந்தீப் சக்சேனா, உள்துறை ஆணையர் ஆஷிஷ் சட்டர்ஜி, காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

மத்திய அமைச்சருடனான எங்கள் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணையம் மேகேதாட்டு குறித்து விவாதிக்கக்கூடாது என்பது தான் எங்கள் முக்கிய கோரிக்கை. ஆணையத்தின் வரம்புக்குள் அது வராது என்று கூறினோம். ஆனால், வழக்கறிஞரிடம் அவர்களுக்கு விவாதிக்க அதிகாரம் உண்டு என்று ஆலோசனை பெற்றுள்ளனர். அதேபோல் நாங்களும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றதில் அந்த கருத்து சரியானது அல்ல என்று தெரிவித்ததாகக் கூறினோம். மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதை வலியுறுத்தினோம்.

மத்திய அமைச்சர் ஏற்கெனவே பலமுறை உறுதியளித்தபடி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்தஅணையும் காவிரியில் கர்நாடகா கட்ட முடியாது என்று மீண்டும் மீண்டும் அவர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x