Published : 23 Jun 2022 07:36 AM
Last Updated : 23 Jun 2022 07:36 AM
சென்னை: தமிழகத்தில் வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் வசதிக்காக ரூ.160 கோடியில் சாலைகள்மேம்படுத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வனத்துறை சார்பில், அத்துறை வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பங்கேற்று, திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் வசதிக்காக நடப்பாண்டில் சுமார் 100 கிமீ நீளமுள்ள சாலைகள் ரூ.160கோடியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள 3 ஆயிரத்து 454 கிமீ நீளமுள்ள சாலைகளை 4 ஆண்டுக்கு ஒருமுறை மேம்படுத்தவும், நெடுஞ்சாலைகளுக்கான வனப்பகுதி இணைப்புச் சாலைகளை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விரைவு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வன விலங்குகள் மக்கள்வசிக்கும் கிராமப் பகுதிகளுக்குள்வராமல் தடுத்திட அகழிகளை பராமரிக்க பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான ஊதியம் நிலுவையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூழல் சுற்றுலா மையங்கள் மேம்பாடு, வன விலங்குகளால் மனித உயிரிழப்பு தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும்.
பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் காடுகளின் பரப்பை 33 சதவீதமாக உயர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முதற்கட்டமாக நடப்பாண்டு பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக வனத்துறைக்கு சொந்தமான 229 நாற்றங்கால்களில் 1 கோடியே 77 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக இதுவரை ரூ.11 கோடிவிடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வரும் ஆண்டுகளில் 32 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வனத்துறை தலைவர் சையத் முஜம்மில் அப்பாஸ், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், சுப்ரத் மஹாபத்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT