Published : 23 Jun 2022 07:29 AM
Last Updated : 23 Jun 2022 07:29 AM
சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதி்க்கக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் மற்றும் கோவையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமியின் மகனான கே.சி.சுரேன் பழனிசாமி மற்றும் தணிகாச்சலம், அதிமுக பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக தொடங்கி மாலை 5.30 மணி வரை நடந்தது.
அப்போது மனுதாரர்களான ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன்பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், என்.ஜி.ஆர்.பிரசாத் ஆகியோர் ஆஜராகி, அதிமுகவின் அடிப்படை விதிகளில் எந்தவொரு திருத்தமும் செய்யக்கூடாது என்றும், பொதுச்செயலாளருக்கே எல்லா அதிகாரமும் உள்ளது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியதே செல்லாது என்றும் ஏற்கெனவே மனுதாரர்கள் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த 2017 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கட்சி விதிமுறைகளுக்கு எதிராகஇருமுறை அதிமுகவின் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போதும் இந்த பொதுக்குழு நடைபெறும் எனஒரு தரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்பு தள்ளி வைக்க வேண்டும் என கூறுகிறது.
எனவே இந்த பொதுக்குழு மூலமாக மீண்டும்அடிப்படை விதிகளில் திருத்தம்செய்யவுள்ளனர். எனவே பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றாலும் விதிகளில் எந்தவொரு திருத்தமும் செய்யக்கூடாது என தடை விதிக்க வேண்டும், என வாதிட்டனர்.
இதேபோல அதிமுக பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், ‘‘ அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும்இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கடந்த 2021 டிசம்பரில் தான் உள்கட்சி தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் பதவிக்காலம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு உள்ளது. ஜனநாயக மரபுகளை மீறி விதிகளை திருத்தம் செய்ய முடியாது. ஒருவேளை பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தினாலும், ஒற்றைத்தலைமை தொடர்பாக கட்சியின் அடிப்படை விதிகளில் எந்தவொரு திருத்தமும் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும், என வாதிட்டார்.
ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, ‘‘ கடந்த 1972-ம் ஆண்டுமற்றொரு கட்சியில் 100 பேர் கொண்ட பொதுக்குழு மூலமாக எம்ஜிஆரை வெளியேற்றியது போல நாளை (இன்று) நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு மூலமாக ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்ற திட்டம் நடக்கிறது.
ஒற்றைத்தலைமை வேண்டும் என பொதுக்குழுவில் 90 பேர் ஆதரவு கொடுத்தாலும், கூட்டத்துக்கு வெளியே 90 சதவீத தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள 23 தீர்மானங்களுக்கு மட்டும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத்தாண்டி வேறு எந்தவொரு தீர்மானங்களையும், திருத்தங்களையும் கொண்டுவர முடியாது.
ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் அவ்வாறு நிறைவேற்ற முடியாது. அதேபோல ஒருங்கிணைப்பாளரையும் நீக்க முடியாது. அதேநேரம் நாங்கள் எப்போதும் கட்சி விதிகளுக்கு முரணாக செயல்படப்போவதில்லை. பொதுக்குழுவின் நிகழ்ச்சிநிரலை இருவரும் சேர்ந்து தான் முடிவு செய்ய முடியும், என வாதிட்டார்.
அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் ஆஜராகி, பொதுக்குழுக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் குறித்து முன்னரே அறிவிக்கப்படாது. முந்தைய காலகட்டங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டுள்ளது.
கட்சியின் அடிப்படை விதிகளை திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது. கட்சித் தலைமை தொடர்பாக திருத்தம் கொண்டு வரப்படலாம், அல்லது செய்யாமலும் போகலாம். அவ்வாறு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பமாகக்கூட இருக்கலாம். இந்த ஜனநாயக நடைமுறையை யாரும் தடுக்க முடியாது. ஒருவேளை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடரட்டும், என்றனர்.
அப்போது மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குறுக்கிட்டு, ‘‘பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறியுள்ள நிலையில் அடிப்படை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளலாம் அல்லது செய்யாமலும் போகலாம் என இணை ஒருங்கிணைப்பாளர் தரப்பில் கூறுவதில் இருந்தே பூனை வெளியே வந்து விட்டதைக் காட்டுகிறது. அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் கொடுக்காமல் விதிகளில் திருத்தம் செய்ய முடியாது, என்றார்.
காரசாரமாக நடைபெற்ற அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்றிரவு பொதுக்குழு நடத்த தடை இல்லை என்று உத்தரவு பிறப்பித்தார்.
கட்சியின் அடிப்படை விதிகளை திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது. கட்சித் தலைமை தொடர்பாக திருத்தம் கொண்டு வரப்படலாம், அல்லது செய்யாமலும் போகலாம். அவ்வாறு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பமாகக்கூட இருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT