

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு தாய்மார்கள்மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான 16 வகையான பொருட்கள் அடங்கிய குழந்தைகள் நலப்பெட்டகம் கடந்த 2014-ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டில் இந்த குழந்தைகள் நலப்பெட்டகத்தை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியது.
இந்த டெண்டரில் தஞ்சாவூரைச் சேர்ந்த சாந்தி சர்ஜிகேர்என்ற நிறுவனம், தொழில்நுட்ப ரீதியிலான டெண்டர் விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் தொடர்ந்தவழக்கு நேற்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக நடந்தது.
அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரமும் ஆஜராகி வாதிடும்போது, “2018-19, 2019-20, 2020-21 ஆகிய காலகட்டங்களில் குறைந்தது 3.30 லட்சம் குழந்தைகள் நலப்பெட்டகங்களை விநியோகம் செய்து இருக்க வேண்டும் என்ற தொழில்நுட்ப டெண்டர் விதிமுறைகளை மனுதாரர் நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என்பதால் அந்நிறுவனம் நிராகரிக்கப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இல்லை” என வாதிட்டார்.
அதையேற்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், இது தொடர்பாக மனுதாரர் நிறுவனம் தொடர்ந்த வழக்கைதள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.