Published : 23 Jun 2022 06:43 AM
Last Updated : 23 Jun 2022 06:43 AM
சென்னை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பல்வேறு துறைகளின் தயார்நிலையை பரிசோதிக்க சென்னை மணலி பகுதியில் தொழிற்சாலைக்கு வெளியே அவசர கால ஒத்திகை நேற்று நடைபெற்றது.
இது தொடர்பாக தொழிலகபாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மணலி பகுதியில் சுமார் 13 பெரிய அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியுள்ளது. மேலும் மாவட்டவிபத்து மேலாண்மைக் குழுவில்உள்ள பல்வேறு துறைகளின் தயார்நிலை குறித்தும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டியுள்ளது.
அதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி வழிகாட்டுதல்படி, மணலியில் உள்ள மெட்ராஸ் உரத் தொழிற்சாலை வளாகத்தில் தொழிற்சாலைக்கு வெளியேயான அவசரகால ஒத்திகை நேற்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநர் (திருவொற்றியூர்) எம்.வி.கார்த்திகேயன் பங்கேற்று, "சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுருபிரபாகரன் முன்நிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், பல்வேறு துறைகள், மெட்ராஸ் உரத் தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தங்களது பணி மற்றும் கடமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்" என்றார்.
நிகழ்ச்சியில் பின்னர் பேசிய மாநகராட்சி வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், "மாவட்ட விபத்து மேலாண்மை குழுவில் உள்ள அரசுத் துறைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவர்களுக்குள்ளாகவே பயிற்சி பெற்று, பேரிடர்கள் ஏற்படும்போது, தங்களது உயரதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்காமல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் தயாரிக்கப்பட்ட, தொழிற்சாலைக்கு உள்ளேயும், வெளியேயும் மேற்கொள்ள வேண்டிய அவசரகால தயார்நிலைதிட்டம் குறித்த கையேட்டை வெளியிட்டார். அதில் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய முறைகள், மணலி பகுதியில் இடம்பெற்றுள்ள 13 அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளின் அமைவிடங்களை குறிக்கும் வரைபடங்கள், அவசர காலத்தில் தொடர்புகொள்ள வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மெட்ராஸ் உரச் தொழிற்சாலை தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சரவரணன், தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் ஹர்ஷ் மல்கோத்ரா, சிபிசிஎல் இயக்குநர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT