

தமிழக முதல்வராக ஜெயலலிதா வரும் 23- ம் தேதி பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்கிறது.
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று பிற்பகல் 2 மணிக்கு அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை, ஸ்பென்சர் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக (முதல்வராக) ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து எம்எல்ஏக்களின் கடிதம் மற்றும் அதிமுகவை ஆட்சியமைக்க கோரும் கடிததத்தை ஆளுநர் ரோசய்யாவிடம் அளிக்கின்றனர். அப்போதே, புதிய அமைச்சரவை பட்டியலும் வழங்கப்படும்.
ஆளுநர் அழைப்பு
அதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதா வுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார். வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்கிறார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக வாலாஜா சாலை, காமராஜர் சாலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைத்தல், அண்ணா சாலையில் உள்ள பெரி யார், அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழக முதல்வராக எம்ஜிஆர் 3 முறை இருந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, திமுக தலைவர் கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று 5-வது முறையாக பதவியேற்றார் ஜெயல லிதா. இதன்மூலம் கருணாநிதியின் சாதனையை சமன் செய்தார். தற்போது மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால், தமிழகத்தில் 6-வது முறையாக முதல்வராகும் முதல் தலைவர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றுள்ளார்.