Published : 23 Jun 2022 06:26 AM
Last Updated : 23 Jun 2022 06:26 AM
ராமேசுவரம்: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் அரியவகை சூரிய மீன் சிக்கியது.
பாம்பன் தென்கடல் பகுதியில் சுமார் 100 விசைப்படகுகளில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று புதன்கிழமை காலை மீனவர்கள் கரை திரும்பினர்.
இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று சிக்கியது. இது சுமார் 60 கிலோ எடையும், 4 அடி நீளமும், 3 அடி உயரமும் உடையதாக இருந்தது. மீனின் வால் பகுதியான துடுப்பு பகுதி உருமாறியிருந்ததால் இந்த மீனை பாம்பன் மக்கள் நேற்று ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இந்த மீனைப் பற்றி மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சித்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,
இந்த மீனின் பெயர் சூரிய மீன் (Sun Fish) ஆகும். இந்த மீன் வட்ட வடிவில் காணப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அதிகபட்சம் 3 மீட்டர் நீளமும், ஆயிரம் கிலோவுக்கு மேலும் எடை வளரும் தன்மை கொண்டது. சாதுவான மீன் இனமான சூரிய மீனின் விருப்ப உணவுகள் சிப்பி, நண்டு, ஜெல்லி, சிங்கி, இறால் ஆகியன ஆகும். இந்த மீனின் துடுப்புப் பகுதி மட்டும் உருமாறிக் காணப்படும்.
இந்த வகை சூரிய மீன்கள் பசிபிக், அட்லாண்டிக், ஆர்டிக் மற்றும் இந்திய பெருங்கடலில் காணப்படும்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படுவது மிகவும் அரிதாகும்.
பொதுவாக இந்த வகை மீனை மக்கள் விரும்பி சாப்பிடுவது கிடையாது எனத் தெரிவித்தனர். இதற்கு முன்பு 2019 ஜுன் மாதம் ஒரு சூரிய மீன் பாம்பன் நாட்டுப்படகு மீனவர் களின் வலையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT