Published : 23 Jun 2022 07:24 AM
Last Updated : 23 Jun 2022 07:24 AM

திருச்சி | மது அருந்தும் கூடமாக மாறிய கம்பரசம் பேட்டை தடுப்பணை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி: திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியை மது அருந்துபவர்களிடமிருந்து மீட்டு, இடிந்துகிடக்கும் படித்துறை படிக்கட்டுகளை சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி கம்பரசம்பேட்டை காவிரி படித்துறை பகுதியில் உள்ள தடுப்பணைக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி திருச்சியின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் கூட்டம் சற்று அதிகம் இருக்கும்.

இதனிடையே, கரோனா ஊரடங்கின்போது இங்கு மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததால், சமூக விரோதிகள் சிலர் இப்பகுதியை மது அருந்தும் கூடம்போல மாற்றிவிட்டனர். தற்போது காவிரியில் தண்ணீர் அதிகம் செல்லும் நிலையில், இங்கு பொதுமக்கள் வருகையும் அதிகரித்துள்ளது. ஆனால், அங்கு மது அருந்துபவர்களின் அநாகரீகமான நடவடிக்கைகளால், பொதுமக்கள் இங்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விமலா கூறுகையில், பகல் நேரத்தில் தடுப்பணை பகுதிக்கு வந்து துணிகள் துவைத்துவிட்டு, குளித்துவிட்டு செல்வோம்.

ஆனால் இப்போது இங்கு தனியாக வருவதற்கே பயமாக உள்ளது. சிலர் மது குடித்துவிட்டு பாட்டில்களை படித்துறையிலும், ஆற்றிலும் வீசிச் செல்கின்றனர்.

பாட்டில்கள் உடைந்து, அங்கு வருபவர்களின் கால்களை பதம் பார்க்கின்றன. மேலும், இங்குள்ள படித்துறையும் இடிந்துள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

எனவே, இங்கு மது அருந்துவதைத் தடுத்து, படித்துறையையும் சீரமைத்து தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x