Published : 23 Jun 2022 06:35 AM
Last Updated : 23 Jun 2022 06:35 AM
திருச்சி: திருச்சி கோணக்கரை சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்தசாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையைவிரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியில் குடமுருட்டி வாய்க்கால் காவிரியில் சென்று கலக்கும்இடத்தின் அருகே கோணக்கரைஅமைந்துள்ளது. இந்தச் சாலையில் மாநகராட்சி மின் மயானம், நாய்கள்கருத்தடை அறுவைச் சிகிச்சை மையம், தனியார் கல்லூரி ஆகியன செயல்பட்டு வருகின்றன.
மேலும் உறையூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கரூர் புறவழிச் சாலைக்குச் செல்ல பெரும்பாலும் இந்தச் சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.
மிகவும் சேதமடைந்து குண்டும்குழியுமாக இருந்த கோணக்கரை சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது.
புதிய தார் சாலை அமைக்கப்பட்ட பிறகு அதிகளவிலான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வந்தன. மேலும், உறையூர்சாலை ரோட்டில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் கனரக வாகனங்களும் இந்த சாலை வழியாகவே செல்கின்றன.
இதனால், இந்த வழித்தடம் சில வாரங்களாக அதிக போக்குவரத்து உள்ள சாலையாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கன மழையால் கோணக்கரை சாலையில் குடமுருட்டி வாய்க்கால் கரையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலையின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் ஆற்றுக்குள் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
தற்போது அதிகளவிலான வாகனங்கள் சென்றுவரும் நிலையில், இந்த சாலையில் மண் சரிவுஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் கனரக வாகனங்கள் சென்றால் சாலை மேலும் இடிந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நேரிடும் முன்னர் குடமுருட்டி வாய்க்கால் கரையை சீரமைத்து, சாலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் கான்கிரீட் சுவர் கட்டி நிரந்தர தீர்வுகாணும் வகையில் சீரமைப்பு பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT