Published : 23 Jun 2022 06:35 AM
Last Updated : 23 Jun 2022 06:35 AM

நெல்லை டவுன் பாரதியார் உயர்நிலைப் பள்ளியில் குடிநீர், கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் அவதி: தச்சநல்லூர் மண்டல கூட்டத்தில் புகார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல கூட்டம் அதன் தலைவர் ரேவதி பிரபு தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர். ராஜு, உதவி ஆணையர் லெனின் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் பேசும்போது, “ 28-வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் உயர்நிலைப் பள்ளிக்கு கல்லணை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இருந்து 280 மாணவ, மாணவிகளை இடமாற்றம் செய்துள்ளனர். ஆனால், பாரதியார் பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

பாரதியார் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் கை கழுவுவதற்குகூட தண்ணீர் இல்லை. அங்குள்ள மோட்டாரும் பழுதாகியிருக்கிறது. அங்குள்ள தண்ணீர் தொட்டியை பராமரித்து, குடிநீரை தேக்கி விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதியார் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு போதுமான அடிப்படை வசதிகளை உடனே செய்துதர வேண்டும் என்று தெரிவித்தார்.

13-வது வார்டு கவுன்சிலர் சங்கர்குமார் பேசும்போது, “ மேலக்கரை, கீழக்கரை பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை. அப்பகுதியிலுள்ள சிவன் கோயில் முன்பகுதியில் மின்விளக்குகள் சரிவர எரியவில்லை என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகிறார்கள்.

அந்தோனியார் கோயில் தெருவில் 14 வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் இல்லை. சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் ஜெனரேட்டர் அவசியம். தச்சநல்லூர் புறவழிச்சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மந்தகதியில் நடைபெறுகிறது. பிராயங்குளம் பள்ளி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் உடையார்பட்டி சுடுகாட்டில் கூரை பழுதடைந்துள்ளது. இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

11-வது வார்டு கவுன்சிலர் கந்தன் பேசும்போது, “வண்ணார்பேட்டை யில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இப்பகுதியினருக்கு அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைக்க காலதாமதம் ஆகலாம் என்பதால் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை தெருவில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்” என்றார்.

14-வது வார்டு கவுன்சிலர் கீதா பேசும்போது, “ஸ்ரீபுரம் ஊருடையான்குடியிருப்பு சாலை மிகமோசமாக பழுதடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும். ஊருடையான்குடியிருப்பிலுள்ள நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் இல்லை. இதனால் மாணவ, மாணவியர் வீடுகளில் உள்ள கழிப்பறைக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது. எனவே, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்” என்று கூறினார்.

2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி பேசும்போது, “செட்டிக்குளம் பகுதியில் பொது கழிப்பறை அமைக்க வேண்டும். கரையிருப்பு பகுதியில் முட்செடிகளை அகற்றவேண்டும். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மின்மோட்டார்களை சரிசெய்தால் நீரேற்றம் சீராக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x