

ராணிப்பேட்டை: கோயில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடி நிம்மதியை இழந்ததாக கடிதம் எழுதி பணத்தை மீண்டும் உண்டியலில் செலுத்திய மர்ம நபரால் ராணிப்பேட்டையில் நேற்று சலசலப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அருகே காஞ்சனகிரி மலைக்கோயில் உள்ளது. முக்கிய விசேஷ நாட்களில் இக்கோயிலில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கோயில் வளாகத்தில் 1,008 சுயம்பு லிங்கங்களுடன் கூடிய விநாயகர் சன்னதியில் கோயில் நிர்வாகம் சார்பில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த உண்டியலை மர்ம நபர்கள் கடந்த 17-ம் தேதி உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்றதாக கோயில் நிர்வாகத்தினர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கோயில் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ண கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, கோயில் உண்டியல் திறந்து காணிக்கை பணம் எண்ணும் பணிகள் நடைபெற்றன. அப்போது, ஒரு கவரில் கடிதம் மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் (500 ரூபாய் நோட்டுகள்) இருந்தது.
அந்த கடிதத்தை எடுத்து பார்த்த போது அதில், ‘என்னை மன்னித்து விடுங்கள். நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிவிட்டேன். அதன் பிறகு எனக்கு மனசு சரியில்லை. நிம்மதியும் இல்லை. வீட்டில் நிறைய பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது.
எனவே, நான் மனம் திருந்தி உண்டியலில் இருந்து எடுத்த பணம் ரூ.10 ஆயிரத்தை போட்டு விட்டேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுள் என்னை மன்னிப்பாரா என தெரியாது. வணக்கம்’ என அதில் மர்ம நபர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவல் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. கோயில் உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர் மீண்டும் பணத்தை கோயில் உண்டியலில் செலுத்தி மன்னிப்பு கேட்ட இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.