Published : 23 Jun 2022 12:01 AM
Last Updated : 23 Jun 2022 12:01 AM

அதிமுக பொதுக்குழு விவகாரம்: நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு - இரவே விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இரவே விசாரணை செய்யப்படவுள்ளது.

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதேபோல தணிகாச்சலம் என்பவரும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் முறையீடு செய்தார். இந்த மனுக்கள் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.

வாதங்கள் முடிவில், "அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என்றும், திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை அந்த கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் கட்சிதான். எனவே, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு பணிகள் வேகமெடுத்தன. அதேநேரம், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.

இதனிடையே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் இரவே விசாரணை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடைசிநேர பரபரப்பு அதிமுக வட்டாரத்தில் நிலவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x