Last Updated : 22 Jun, 2022 11:44 PM

 

Published : 22 Jun 2022 11:44 PM
Last Updated : 22 Jun 2022 11:44 PM

'மருந்துகளில்லை, குறைதீர் கூட்டமில்லை' - நிர்வாக குறைபாட்டை கண்டித்து ஜிப்மர் மருத்துவ பேராசிரியர்கள் போராட்டம்

கோப்புப்படம்

புதுச்சேரி: மருந்துகள் இல்லை, குறைதீர் கூட்டம் நடத்துவதில்லை, மோசமான நிர்வாகம் என அடுக்கடுக்காக பிரச்சினைகளைத் தெரிவித்து, போராட்டம் நடத்தப் போவதாக மருத்துவ பேராசிரியர்கள் ஜிப்மர் இயக்குநருக்கு ஆறு பக்கத்துக்கு கடிதம் அளித்துள்ளனர். முதல்கட்டமாக வரும் 24-ம் தேதி நிர்வாக அலுவலகம் முன்பு அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவி வந்தது. தொலைபேசி வழியாக முன்பதிவு செய்து, அதன் பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது.

தற்போது தான் நீண்ட மாதங்களுக்கு பிறகு வெளிப்புற சிகிச்சைகள் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நிர்வாக குறைபாடுகளால் ஜிப்மர் நிலை மோசமாக உள்ளதாக நோயாளிகள், பணியாளர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் ஜிப்மரின் நடவடிக்கைகள் தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை விசாரித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் ஜிப்மர் மருத்துவ பேராசிரியர்கள் சங்கத்தினரும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். இதுபற்றி ஜிப்மர் இயக்குநருக்கு ஆறு பக்கத்திற்கு கடிதமும் தந்துள்ளனர்.

ஜிப்மர் மருத்துவ பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரன் அளித்துள்ள கடித விவரம்: 'ஜிப்மர் நிர்வாகம் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே இல்லை. இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் பலனில்லை. ஜிப்மரின் சூழல் அபாயகரமானதாக மாறி வருவதை தெரிவித்தும் நடவடிக்கையில்லை. நிர்வாகம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கவனம் செலுத்தவே இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தலைமை பண்பே நிர்வாகத்துக்கு இல்லை.

ஜிப்மரில் உள்ள இணைய வசதியின் நிலை படுமோசமாக உள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சையில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. வை-பை வசதியும் மோசமாக உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் தருவதில் பாதிப்பு நிலவுகிறது. மிகவும் அத்தியாவசிய மருந்துகள் கூட இல்லை. இதனால் ஜிப்மர் எதிரேயுள்ள மருந்தகங்களை நாடும் சூழல் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.

குறிப்பாக அத்தியாவசிய மாத்திரைகள், அறுவை சிகிச்சை சாதனங்கள் தொடங்கி கையுறைகள் கூட வாங்கி வர வேண்டிய நிலைக்கு ஏழை நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். மருந்துகள் வாங்குவதற்கான கோப்புகள் நிர்வாக அறையிலேயே உள்ளன. ஏழை மக்கள் புகார் தந்தும் அதில் முன்னேற்றம் இல்லை. கடந்த ஆறு மாதங்களாக இந்நிலையே நிலவுகிறது.

சட்டவிதிகள் நெறிமுறைகள் தொடர்பாக நிர்வாகத்துக்கு சரியான புரிதல் இல்லை. அதை செயல்படுத்துவதும் இல்லை. ஜிப்மரில் பணிபுரிவோருக்கான பணிக்கொடை, ஓய்வூதியம் தொடங்கி பல விஷயங்களிலும் நிர்வாகம் கவனம் செலுத்தவே இல்லை. முக்கியமாக ஊழியர்கள் குறைதீர்வு கூட்டமே நடத்தப்படவில்லை. ஊழியர்களின் நலனுக்கு எதிராகவே ஜிப்மர் நிர்வாகம் செயல்படுகிறது.

ஏழை நோயாளிகளுக்கும், ஊழியர்களுக்கும் எதிராகவே ஜிப்மர் நிர்வாகம் செயல்படுகிறது. முக்கியமான ஆராய்ச்சி சாதனங்களுக்கோ, பணிகளுக்கோ நிதி செலவிடுவதில் சுணக்கம் உள்ளது. இதனால் முதல் கட்டமாக நிர்வாக அலுவலகம் முன்பு வரும் 24-ம் தேதி அமைதியான முறையில் போராட்டத்தை தொடங்க உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இரு ஆண்டுகளாக தொற்றா நோய்களான நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து மாத்திரைகளை ஜிப்மர் நிறுத்தியதால் பலர் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் மாத்திரைகளையும் தருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் புதுச்சேரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருவோருக்கு அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில் இல்லை என்று வெளியில் வாங்க சொல்கின்றனர்.

இதுகுறித்து, இதய நோய்க்காக விழுப்புரத்தில் இருந்து சிகிச்சைக்கு வந்த விவசாயியொருவர் கூறுகையில், "இதய பிரச்சினைக்காக இங்கு சிகிச்சைக்கு வந்தேன். மாத்திரை வாங்க சென்றபோது இல்லை. அவர்கள் மாத்திரை தந்ததாக குறித்து கொள்கின்றனர். ஆனால், மாத்திரையை வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு கூறினர். மாத்திரை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். என்னால் வெளியில் வாங்கிக் கொள்ள முடியும். பலரும் மாத்திரை இல்லாததால் பணம் தந்து வாங்க வசதியில்லாமல் அப்படியே சென்றதை பார்த்தேன்" என்றார்.

ஜிப்மர் வட்டாரங்களில் விசாரித்த போது, "மாத்திரை தட்டுப்பாடு உள்ளது. சாதாரண வைட்டமின் மாத்திரை தொடங்கி அத்தியாவசியமான மாத்திரைகள் தற்போது கையிருப்பில் இல்லை. அதனால் ஜிப்மர் வளாகத்தில் பணம் செலுத்தி வாங்கும் பார்மசிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. தொற்றா நோய்களில் தொடர் சிகிச்சையில் மனநோய், புற்றுநோய் தொடங்கி பல பிரிவுகளில் ஏராளமான ஏழை நோயாளிகள் மாதந்தோறும் மருந்து வாங்க வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x