

கோவை: மண்வளப் பாதுகாப்புக்காக அடுத்த கட்டமாக 21 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக, ஈஷா நிறுவனர் சத்குரு அறிவித்துள்ளார்.
மண்வளப் பாதுகாப்பை வலியுறுத்தியும், அதற்கு உரிய சட்டங்களை இயற்ற வலியுறுத்தியும் ஈஷா நிறுவனர் சத்குரு 'மண் காப்போம்' இயக்கத்தை தொடங்கி, 27 நாடுகளுக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். 27,200 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்ட அவர், 593 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார். பல்வேறு நாடுகள், நாட்டின் பல்வேறு மாநில அரசுகளுடன், மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டார். சத்குருவின் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நேற்று (ஜூன் 21-ம் தேதி) கோவை ஆலாந்துறையின், ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு நிறைவடைந்தது.
இங்கு நிறைவு விழாவில், சத்குரு பேசும்போது, ''இந்த 100 நாள் இருசக்கர வாகனப் பயணத்தில் நான் பல ஆபத்தான தருணங்களை கடந்து வந்துள்ளேன். கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு குளிர்ச்சியான சூழலை இங்கு அனுபவிக்கிறேன். இந்த 100 நாள் இருசக்கர வாகனப் பயணம் நிறைவு அடைந்துவிட்டது. ஆனால், இனிமேல் தான் உண்மையில் கடினமான வேலை தொடங்க உள்ளது. 'மண் காப்போம்' இயக்கத்தின் அடுத்த கட்டமாக, 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது பயணத்தை தொடங்க உள்ளேன்.
அடுத்த, ஒன்றரை மாதத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, கரிபீயன் நாடுகளில் உள்ள 21 நாடுகளுக்கு பயணம் செய்து அந்நாடுகள் மண் வளப் பாதுகாப்புக்காக உரிய சட்டங்களை இயற்றுவதற்கு வலியுறுத்த உள்ளேன். அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மண் வளப் பாதுகாப்புக்கான கொள்கைகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, இந்த 100 நாள் பயணம் முடிந்துவிட்டது என நீங்கள் நினைத்து அமைதியாகவிடக் கூடாது. உலக நாடுகள் அனைத்து உரிய சட்டங்கள் இயற்றும் வரை நீங்கள் தொடர்ந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வருடத்துக்கு தினமும் குறைந்தப்பட்சம் 15 நிமிடங்களாவது மண் வளப் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும்,'' என்றார்.
நிறைவு விழாவில், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழக எல்லையான பண்ணாரியில் இருந்து ஆதியோகி வரை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.