‘பிகில்’ படத்துக்கு ரூ.113 கூடுதல் கட்டணம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7,000 வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

‘பிகில்’ படத்துக்கு ரூ.113 கூடுதல் கட்டணம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7,000 வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஜய் நடித்த 'பிகில்'படத்துக்கு தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் ரூ.7 ஆயிரம் வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பிகில்' திரைப்படத்தைப் பார்ப்பதற்காக கடந்த 18.10.2019 அன்று ஆன்லனைில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். சென்னை அயனாவரம் பகுதியில் கோபிகிருஷ்ணா திரையரங்கில் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக ரூ.233.60 செலுத்தி இந்த டிக்கெட்டை வாங்கியிருந்தார்.

தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.113 வசூலிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவராஜன், இதுதொடர்பாக திரையரங்க நிர்வாகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்தார்.

தன்னிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப வழங்குமாறு கோரினார். ஆனால், இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் (வடக்கு) தேவராஜன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோ ஆணையம், கோபிகிருஷ்ணா திரையரங்கம், மனுதாரரிடமிருந்து வசூலித்த கூடுதல் கட்டணம் ரூ.100 திரும்பச் செலுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.5000, வழக்குச் செலவாக ரூ.2000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in