

கோவை: கோவையில் பாஜக விவசாய அணி சார்பில் சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
100 நாட்கள் 30,000 கி.மீ உலக நாடுகள் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மண் வளம் காக்க மகத்தான முயற்சி எடுத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை சத்குரு செய்து முடித்துள்ளதாக ஈஷா அமைப்பு தெரிவிக்கிறது.
இந்த நிலையில், சத்தியமங்கலத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, கோவை வந்த சத்குரு, சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி வாயிலாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசுகையில், "உலக அளவில் அடுத்த 60 ஆண்டுகளுக்குள் மண் வளம் முற்றிலும் அழிந்துவிடும் என சர்வதேச விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். அதனால் மண் அழிவைத் தடுக்க நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இதற்காக சத்குரு மண் காப்போம் என்ற இயக்கத்தை தொடங்கி பெரும் செயலை முன்னெடுத்திருப்பதற்கு எனது பாராட்டுக்கள்.
கலை, கலாச்சாரம், நாகரிகம், உணவுமுறை என அனைத்திற்கும் மண் தான் அடிப்படை. மண் தான் நம் சமூகத்தின் உயிராகவும் உள்ளது. இதுபோன்ற பெரும்பணிகளை சத்குரு தொடர்ந்து செயல்படுத்த எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
பின்னர், இன்று கோவை திரும்பிய ஈஷா சத்குரு அவர்களுக்கு கோவை கொடிசியா அருகிலுள்ள மைதானத்தில் பாஜக விவசாய அணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள்,பழங்கள் ஒன்பது கூடைகளில் சத்குருவுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் ''உண்மை உணர்ந்து, உரைத்து மக்கள் உடல்நலம், மனநலம் காப்பதால் சத்குரு என்றழைக்கப்பட்டார். தற்போது மண்வளமும் காக்க முனைவதால் இனி இவர் மகாசத்குரு என்றழைக்கப்படுவார்'' என்றார்.
இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, மாநில செயலாளர் வி.விஜயகுமார், விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் வசந்தசேனன், வடக்கு மாவட்ட தலைவர் ஆர்த்தி ரவி, தெற்கு மாவட்ட தலைவர் தர்மபிரகாஷ், மாநில துணை தலைவர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.