கோயில் நிலங்களை பிற துறைகளின் பயன்பாட்டிற்கு மாற்றிய அரசு உத்தரவை ரத்து செய்தது சரிதான்: உயர் நீதிமன்றம்

கோயில் நிலங்களை பிற துறைகளின் பயன்பாட்டிற்கு மாற்றிய அரசு உத்தரவை ரத்து செய்தது சரிதான்: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீன்வளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு மாற்றிய உத்தரவுகளை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்பு சரியானதுதான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2.03 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத் துறை அனுமதி இல்லாமல் 1963-ம் ஆண்டு மீன்வளத் துறைக்கு மாற்ற்பட்டு, அதில் சிறு பகுதியில் ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் மீன்களை பாதுகாப்பதற்கான கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 1.15 ஏக்கர் நிலம் கடந்த 2018-ம் ஆண்டு அறநிலையத் துறை அனுமதி இல்லாமல், போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் இந்த உத்தரவுகளை எதிர்த்து கோயில் நிர்வாகங்களின் சார்பிலும், பக்தர்கள் குகன், ஸ்ரீதர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், அறநிலையத் துறை கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக் கூடாது என கூறி, அரசின் உத்தரவுகளை ரத்து செய்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், "கோயில்களுக்கு சொந்தமான நிலம் அதன் பயன்பாடுகளுக்கு தவிர மற்றவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறு இல்லை.

எனவே, அற நிலையத்துறை அனுமதி இல்லாமல் நிலத்தை மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டது சரிதான். இந்த உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கோயில்களின் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிட்டு, அரசின் மேல்முறையீட்டு வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in