

காரைக்கால்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து காரைக்கால் மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று (ஜூன் 21) இரவு கோட்டுச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்எல்ஏ எம்.வி.ஓமலிங்கம் தலைமை வகித்தார்.
மாவட்டத்தில் உள்ள 5 தொகுதி செயலாளர்கள், 5 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள் 6 பேர் உள்ளிட்ட கட்சியின் மற்றப் பிரிவுகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமையேற்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து எம்வி ஓமலிங்கம் கூறியது: "கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்போம் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தற்போதையை நிலைமையில், கழகத்தின் நலன் கருதி, ஒற்றைத் தலைமை தேவை என்றும், ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியையும், 4 ஆண்டு காலம் ஆட்சியையும் வழி நடத்திச் சென்ற எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று கட்சியை வலிமையுடன் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்று ஓமலிங்கம் கூறினார்.