Last Updated : 03 May, 2016 08:42 AM

 

Published : 03 May 2016 08:42 AM
Last Updated : 03 May 2016 08:42 AM

முதல்கட்ட நுழைவுத்தேர்வு எழுதாத மாணவர்கள்: இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க முடியாது - சிபிஎஸ்இ அறிவிப்பு

முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எழுதாத 3,250 மாணவர்கள் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க முடியாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (NEET) கடந்த 1-ம் தேதி நடத்தியது. நாடுமுழுவதும் 52 நகரங்களில் 1,040 மையங்களில் நடந்த இந்த தேர்வை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் 26 ஆயிரம் மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 22,750 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர். பல்வேறு காரணங்களால் தேர்வில் கலந்துகொள்ளாத 3,250 மாணவர்களும் (8 சதவீதம்) இந்த ஆண்டு டாக்டருக்கு படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரி கள் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) என்ற ஒரே நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மே 1-ம் தேதி அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வை, முதல்கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வாக மாற்றி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இந்த தேர்வை எழுத வேண்டும். தேர்வை தவறவிட்டால், ஜூலை 24-ம் தேதி நடைபெறும் இரண் டாம்கட்ட தேர்வை எழுத முடியாது.

முதல் கட்ட தேர்வுக்கு விண் ணப்பிக்காதவர்கள் மட்டுமே இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்திருந்தோம். ஆனாலும் 8 சதவீதம் மாணவர்கள் முதல்கட்ட தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதாத மாணவர்களால் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு படிக்க முடியாது. இரண்டுகட்ட தேர்வு முடிவுகளையும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் (எஸ்டிபிஜிஏ - SDPGA) சங்கத்தின் அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடுக்கு சென்றுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நுழைவுத்தேர்வை ரத்து செய்தாலோ அல்லது நுழைவுத் தேர்வுக்கு தடை விதித்தாலோ தேர்வு எழுதாத 8 சதவீதம் மாணவர்கள் தமிழக அரசு நடத்தும் கலந்தாய்வு மூலமாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க முடியும்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைமுறைக்கு வந்தாலும், அகில இந்திய ஒதுக்கீடு கண்டிப்பாக இருக்கும். 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள 85 சதவீதம் இடங்களை நிரப்புவதற்கான பட்டியல் தமிழக அரசிடம் கொடுக்கப்படும். தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுவதால், தமிழக அரசால் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மத்திய அரசுக்கு சென்றுவிடும். அந்த இடங்களில் வடமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்துவிடுவார்கள். இதனால் தமிழக மாணவர்களின் டாக்டராகும் கனவு தகர்ந்துவிடும். அதனால்தான் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x