Published : 22 Jun 2022 05:03 AM
Last Updated : 22 Jun 2022 05:03 AM

அதிமுக - தமிழகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?

இந்திய அரசியலில் காங்கிரஸ் எந்த அளவுக்கு அவசியமோ, அதற்கு சற்றும் குறையாமல் தமிழக அரசியலில் அதிமுக மிகவும் தேவை.

நமது நாட்டில் சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்கணக்கான கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.

சுதந்திரா கட்சி - தொலைநோக்கு கொள்கைகளை முன்வைத்து, இந்தியாவுக்கு முற்றிலும் புதிய தளத்தில் செயல்பட்ட கட்சி. ஒருசில ஆண்டுகளுக்கு, ஓரிரு மாநிலங்களில் மட்டும் சற்றே செல்வாக்குடன் இருந்து, பிறகு சிறிது சிறிதாகக் கரைந்து காணாமல் போனது. ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்தது சுதந்திரா கட்சி. அது இருந்தபோதே யாராலும் கவனிக்கப்படவில்லை. தேய்ந்து மறைந்ததைப் பற்றியும் யாரும் கவலைப் படவில்லை.

கடந்த 1977 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது உருவான ஜனதா கட்சி - பல புதிய நம்பிக்கைகளை தோற்றுவித்தது. ஆனாலும் மிகக் குறுகிய காலத்திலேயே சுருங்கிப் போனது.

கடந்த 1990-களில் 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிகள் இன்று ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, இரவல் ஆக்ஸிஜனில், இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

சிவசேனா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் ஆகியன, மாநிலக் கட்சியாக இருந்து கொண்டு, தேசிய கட்சிகளாக போக்கு காட்டிக் கொண்டு இருக்கின்றன. ஆம் ஆத்மி மட்டும் டெல்லி, பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா என்று விரிவடைய முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. வரும் ஆண்டுகளில் மக்கள் தரும் வரவேற்பைப் பொருத்து இது வலுவான தேசிய கட்சியாக உயருமா என்று பார்க்கலாம்.

தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஜனதா தளம் (பிஜுபட்நாயக்) ஜனதா தளம் (தேவகவுடா), திமுக, அதிமுக ஆகியன அந்தந்த மாநிலங்களில் வலுவாக செயல்புரிந்து வருகின்றன.

இரண்டு கட்சிகளின் பிடியில்

திமுக, அதிமுக இரண்டும், எதிரெதிர் முனைகளில் இருந்தாலும், தமிழக அரசியல், இந்த இரண்டு கட்சிகளின் பிடியில்தான் இருக்கிறது. இவ்விரு கட்சிகளையும் தாண்டி தமிழக அரசியல் இயங்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை.

தமிழக மக்களுக்கு இவ்விரண்டும் நன்மையும் தீமையும் கலந்தே செய்துள்ளன. சில இடங்களில் ஒன்றுபட்டும், பல சமயங்களில் வேறுபட்டும் தனித்தனியே இயங்குகிற போதும், இரு கழகங்களின் செல்வாக்கு பெரிதாக எப்போதும் குறைந்ததே இல்லை.

அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா மீது மக்கள் கொண்டிருந்த தீராத அன்பு, பற்று, நம்பிக்கையே - இவ்விரு கட்சிகளின் ஆழமான அஸ்திவாரம்.

கருணாநிதி, ஜெயலலிதா முறையே தங்கள் கட்சியின் நிறுவனர்களைத் தொடர்ந்து மிகப்பெரும் வலிமை சேர்த்தார்கள். இவ்விரு தலைவர்களின் மறைவுக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அநேகமாக அதே வலிமையுடன் திகழ்கிறது; ஆனால் அதிமுக தத்தளிக்கிறது. எனவே, திமுகவைப் போலவே அதிமுகவையும் வலிமையாக வைத்திருக்க வேண்டியது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடமை.

ஒரு வேடிக்கையான உண்மை - திமுகவுக்கு அதிமுகவும், அதிமுகவுக்கு திமுகவும் மிகவும் தேவைப்படுகிறது. திமுகவின் வெற்றியில், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்குக் கணிசமான பங்கு இருக்கிறது. இதேபோல அதிமுக வெற்றியை, திமுக எதிர்ப்பு ஓட்டுகளே தீர்மானிக்கும். ஒன்றுக்கு மாற்றாக அல்ல; ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை மக்கள் பார்க்கிறார்கள். இந்த நிலையில், திமுக - அதிமுக இடையிலான முக்கிய வேறுபாட்டை மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.

அடிமட்ட அரசியலுக்கு அதிமுக!

எப்போதுமே வீரியத்துடன் எல்லாவற்றிலும் அரசியல் செய்து தீவிரமாகக் களப்பணியாற்றும் திமுக - ஒரு ‘ஹைப்பர்’ மாடல். தேர்தலின்போது மட்டும் தீவிரமாகப் பணியாற்றி, பின்னர் அவரவர் வேலைக்குச் செல்ல விடும் அதிமுக - ஒரு ‘ஸ்லீப்பர்’ மாடல்! திமுக, அதிமுக மீதான விமர்சனப் பார்வை அல்ல இது. ஓர் அரசியல் கட்சியின் தன்மை, இயல்பு, அடையாளம் பற்றிய மதிப்பீடு. அவ்வளவே.

ஒருசில பிரிவினரின் நிரந்தர ஆதரவுடன், வேறு சிலரைச் சேர்த்துக் கொண்டு இயங்கும் திமுக ‘மாடல்’, ஒரு வலுவான மாடல். சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல; சில உரிமைகளை, சில கோரிக்கைகளை ஓங்கி ஒலிக்கிற கட்சி. A truly vocal party.

அதிமுக - சாதி, மதம், மொழி இனங்களுக்கு அப்பாற்பட்டு, சாமானியர்களின் ஆதரவில் இயங்குகிற, எல்லாரையும் உள்ளடக்கிய, இயன்றவரை எல்லாருக்கும் சமவாய்ப்பு நல்கக் கூடிய ‘மிதமான’ கட்சி. இது அப்படியே, அகில இந்திய அளவில், காங்கிரஸ் கட்சியின் மாடல்.

தீவிர கொள்கைப் பிடிப்பு, ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டங்கள் - இங்கு மிகக் குறைவு. ஏறத்தாழ ஒரு பகுதி நேரப் பணி போல விருப்பத்துக்கு ஏற்ப அதிமுகவினர் செயல்படலாம்; செயல்படாமல் ஒதுங்கி நிற்கலாம்.

அரசியல் என்பது, தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல; தேர்தலில் வாக்களித்தல் தவிர்த்து, அபூர்வமாக எப்போதேனும், நெருங்கிய சிலருடன் கட்சி அரசியல் ‘பேசுவதோடு’ சரி; மற்றபடி ஒரு பார்வையாளனாக மட்டுமே அதிமுக ஆதரவாளர் நின்றுவிடுவார். காங்கிரஸ் கட்சி ஆதரவாளரும் இதே ரகம்தான்.

அரசியல் ரீதியாக காங்கிரஸ், அதிமுக மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இங்கே விவாதத்துக்கு உட்படவில்லை. ஓர் அரசியல் கட்சியின் பொதுவான இயல்பு, நடைமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில், அமெரிக்காவில் ஜனநாயக (மென்மை), குடியரசு (தீவிரம்) கட்சிகளைப் போன்று தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டையும் சொல்லலாம். அந்த வகையில் தமிழகத்துக்குத் திமுக, அதிமுகவின் இருப்பு மிக அத்தியாவசியம் ஆகிறது.

இந்திய அரசியலில் ஹைப்பர்மாடலாக செயல்பட்ட இடதுசாரிகளின் சரிவும் பாஜகவின் ஹைப்பர் மாடல் வெற்றியும் ஏறக்குறைய ஒரே காலத்தில் நிகழ்ந்தவை! இரண்டு ஹைப்பர் மாடல்கள் அல்லது இரண்டு ‘ஸ்லீப்பர்’ மாடல்கள் ஒரே சமயத்தில் வெற்றி காண இந்திய தேர்தல் களத்தில் இடமில்லை.

தீவிரம், செயல் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பாஜக - திமுக, இரண்டும் ஒரே ரகம்! நினைவில் கொள்வோம் இது - கொள்கை ஒப்பீடு அல்ல; செயல்பாடுகளில் உள்ள பொதுமை குறித்த பார்வை மட்டுமே.

அரசியல் மென்மையாளர்கள்

‘எனக்கு அது வேண்டாம்’ என்கிற எண்ணம் கொண்ட மிதமான சாமானியர்களுக்கு ஓர் அரசியல் புகலிடம் தேவைப்படும் போது, தமிழகத்தில் அதிமுகவின் இருப்புக்கு அர்த்தம் சேர்க்கிறது. தேசிய அளவில், காங்கிரஸுக்கான தேவை கூடுகிறது. மக்களுக்கும் அதிமுகவுக்கும் உள்ள தொடர்பு இதுதான்.

அதிமுகவுக்கு இணையாக வேறு ஒரு மிதமான கட்சி தமிழகத்தில் தோன்றாத வரை, அரசியல் மென்மையாளர்கள், பொது வாக்காளர்களுக்கு திமுகவுக்கு மாற்று அதிமுகதான்.

அதிமுகவுக்கு இணையாக வேறு ஒரு மிதமான கட்சி தமிழகத்தில் தோன்றாத வரை, அரசியல் மென்மையாளர்கள், பொது வாக்காளர்களுக்கு அதிமுகவை விட்டால் வேறு வழி இல்லை.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x