Published : 22 Jun 2022 06:25 AM
Last Updated : 22 Jun 2022 06:25 AM

இந்திய அளவில் தமிழகம் 15 ஆண்டுகளுக்கு முன்னோக்கி பயணித்து வருவதால் தேசிய கல்விக் கொள்கை அவசியமில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சென்னை: மாணவர் சேர்க்கை விகிதம் மற்றும் கல்வியில் இந்திய அளவில் தமிழகம் 15 ஆண்டுகளுக்கு முன்னோக்கி பயணித்து வருவதால் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி கடலூரைச் சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவில், ``கல்வி என்பது மாநில கொள்கை சார்ந்தது. தேசிய கல்விக் கொள்கை என்பது எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லாத வரைவு கொள்கையாக உள்ளது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலையில் தமிழில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து சமத்துவமான கல்வி என்ற அடித்தளத்தை கொண்டுள்ள மதச்சார்பற்ற தமிழகத்தில், இரு மொழிக்கொள்கையும், தாய்மொழியில் அடிப்படைக் கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தேசிய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 27.1 சதவீதத்தில் இருந்து 2035-ல் 50 சதவீதமாக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்தில் தரமான இலவசக்கல்வி, மதிய உணவு, இலவச புத்தகம், சீருடை,சைக்கிள், காலணி, லேப்டாப், கல்வி உதவித்தொகை வழங்குவதால் மொத்த மாணவர் சேர்க்கைவிகிதம் தற்போது 51.4 சதவீதமாகஉள்ளது.

இது தற்போதைய தேசியசராசரியைக் காட்டிலும் இருமடங்கு அதிகம். இந்தியாவில் உள்ள 38 மாநிலங்களி்ல் 18 மாநிலங்கள் தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால் தமிழகம் தேசிய கல்வி கொள்கையைக்காட்டிலும் கல்வியில் சிறந்து விளங்கி 15 ஆண்டுகளுக்கு முன்னோக்கி பயணித்து வருகிறது.

கல்வி தரத்தில் சாதித்துக்காட்டி வரும் தமிழகத்தில் தேசியக்கல்வி கொள்கையை அமல்படுத்தினால் அது தமிழக மக்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கு என தனித்தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு கல்வித்தரத்தை பேணிகாக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள தற்போதைய கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கையால் இடை நிற்றல் அதிகரிக்கும். மேலும், தமிழகத்தின் வரலாற்று மரபுகள், தற்போதைய சூழல், எதிர்கால விருப்பங்களை கருத்தில் கொண்டு மாநில கல்விக் கொள்கையை வகுக்க டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என அதில் கோரப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x