

காஞ்சிபுரம் / திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பூண்டி ஏரியிலிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 24 அடி. கொள்ளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். அதிக நீர்வரத்தால் ஏரியின் நீர்மட்டம் 23.36 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 3,475 மில்லியன் கனஅடியாக உள்ளது. விநாடிக்கு 1,700 கனஅடி நீர் ஏரிக்கு வருகிறது. நிர்ணயித்த நீர்மட்டத்தை நெருங்கியதாலும் தொடர்ந்து மழை பெய்யலாம் என்பதாலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உத்தரவின்பேரில், நேற்று 250 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
முதல்முறையாக கோடையில்..
முன்னதாக சுற்றியுள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஏரியின் நீர்மட்டத்தை 23 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் மழையால் ஏரிகளின் நீர்இருப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதில், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 1,018 மில்லியன் கன அடியாகவும் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர்இருப்பு 3,076 மில்லியன் கனஅடியாகவும் 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியின் நீர்இருப்பு 432 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.
மேலும், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் இருப்பு அதிகரிப்பால், தற்போது பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பதை நீர்வளத்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.