மதுரை மேற்கு தொகுதியில் திமுக தீவிர பிரச்சாரத்தால் அமைச்சருக்கு நெருக்கடி

மதுரை மேற்கு தொகுதியில் திமுக தீவிர பிரச்சாரத்தால் அமைச்சருக்கு நெருக்கடி
Updated on
1 min read

மதுரை மேற்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் கோ.தளபதி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர் பிரச்சார உத்தியை மாற்றினர்.

மதுரை மேற்குத் தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவரை எதிர்த்து திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி போட்டியிடுகிறார். மக்கள் நலக்கூட்டணியில் மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி போட்டியிடுவதால் மேலும் முக்கியத்துவம் பெற்றது. 3 முக்கிய வேட்பாளர்களின் கடும் பிரச்சாரத்தால் நாளுக்கு நாள் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

பெத்தானியாபுரம், பைபாஸ்ரோடு, ஜெய்ஹிந்த்புரம் உள்பட நகரில் 15 வார்டுகள், அச்சம்பத்து, கொடி மங்கலம் உள்ளிட்ட சில கிராம பஞ்சாயத்துகள், பரவை பேரூராட்சியும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் கோ.தளபதி முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நேற்று முதல் 2-ம் கட்டத்தை துவக்கினார். கட்சியினர் ஒத்துழைப்பு, திட்டமிட்ட பிரச்சாரத்தால் தளபதி போட்டியில் முன்னேறி வருகிறார். இவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் வீடு,வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது வாக்காளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை, 5 ஆண்டுகால அதிமுக ஆட்சி மீது மக்களுக்குள்ள கோபம் உள்ளிட்ட பல காரணங்கள் தங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கின்றனர் திமுகவினர். திமுகவால் இந்தளவிற்கு பிரச்சாரம் செய்ய முடியாது எனக்கருதிய அதிமுகவினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதன்மூலம் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர். அமைச்சரின் பிரச்சாரத்தில் ஆரம்பத்தில் சில இடங்களில் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினையால் எதிர்ப்பு எழுந்தது. கவுன்சிலர்கள் செயல்பாடு, திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநகராட்சி காட்டிய மெத்தனம் அமைச்சருக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரச்சாரத்திற்கு முன்பே வார்டுகளில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை திட்டமிட்டு, மக்களை சமாளிக்கும் வகையில் அதிமுகவினர் வாக்கு சேகரிக்கின்றனர்.

திமுகவினரின் வேகத்தை குறைக்கும் வகையில் தற்போது அதிமுகவினரும் திண்ணைப் பிரச்சாரத்தை துவக்கி உள்ளனர். 50 வாக்கிற்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வீடு, வீடாக சென்று ஆதரவு கேட்டு வருகிறார். இப்படி வார்டுக்கு 200 முதல் 400 பேர் வரை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இவர்கள் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச்சிஸ்ட் வேட்பாளர் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நடுத்தர வாக்காளர்களை குறிவைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பெறும் வாக்குகள் யாருடைய வெற்றியை பாதிக்கும் என அதிமுக, திமுக என இருவருமே கணக்கு பார்த்து வருகின்றனர்.

திமுக, அதிமுகவினரின் போட்டி பிரச்சாரம் இத்தொகுதி வாக்காளர்களிடையே பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. பாஜக, பார்வர்டு பிளாக், பாமக வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in