

திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவுஅரசு மருத்துவமனை வளாகத்தில், திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய பொருட்களால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவுஅரசு மருத்துவமனைக்கு, திருச்சிமட்டுமின்றி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால், எந்நேரமும் பரபரப்பாகவே இருக்கும் இங்கு, ஊழியர்களின் அலட்சியத்தால் அவ்வப்போது சுகாதாரம் கெட்டு வருகிறது.
அந்தவகையில், மருத்துவமனையின் பல்நோக்கு மருத்துவ சிகிச்சை கட்டிடத்துக்கு எதிரிலும், எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவின் பின்புறமும் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு, சேதமடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இரும்புக் கட்டில்கள், நாற்காலிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வீல் சேர்கள், இழுவை வண்டிகள், கதவுகள், தலையணைகள் உட்பட பல்வேறு பொருட்கள் பல மாதங்களாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
பயன்படுத்த முடியாமல் வெளியே வீசப்பட்டுள்ள இந்தப் பொருட்கள், மழை மற்றும் வெயிலில் மேலும் சேதமடைந்து வருவதுடன், குப்பை சேரும் இடமாக மாறி வருகின்றன.
இதனிடையே, கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பொருட்களிலும் மழைநீர் தேங்கி நிற்பதால், மருத்துவமனை வளாகத்தில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் வகையில், “நம் மருத்துவமனை- மகத்தான மருத்துவமனை’’ என்ற திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்பட்டது. அப்போது, மருத்துவமனை வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட நிலையில்,இந்த பழைய பொருட்கள் அகற்றப்படவில்லை.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘பயன்பாடு முடிந்து ஒதுக்கப்படும் பழைய பொருட்களை தன்னிச்சையாக விற்பனை செய்ய முடியாது. டெண்டர் விட்டுதான் விற்பனை செய்ய முடியும்’’என்றனர்.
அரசு மருத்துவமனைக்கு ஏழை, எளிய மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், இங்கு வந்து நோயைப் பெற்றுச் செல்லாமல் தடுக்கும் வகையில், இந்த பழையபொருட்களை அப்புறப்படுத்தவோ அல்லது மூடிய அறைக்குள் வைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.