புதுச்சேரி | மின்கம்பி உயிரிழப்புகளை தடுக்கக் கோரி அதிமுகவினரால் மின்துறை தலைமை அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி | மின்கம்பி உயிரிழப்புகளை தடுக்கக் கோரி அதிமுகவினரால் மின்துறை தலைமை அலுவலகம் முற்றுகை
Updated on
1 min read

புதுச்சேரி: மின்கம்பி அறுந்து இருவர் உயிரிழப்பை அடுத்து மின்துறை தலைமை அலுவலகத்தை அதிமுகவினர் இன்று முற்றுகையிட்டனர்.

மின்கம்பி அறுந்து விழுந்து இருவர் உயிரிழந்ததையடுத்து மின்துறை தலைமை அலுவலகத்தை அதிமுகவினர் இன்று முற்றுகையிட்டனர். புதைவடகேபிள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மின்கம்பிகளின் நிலையை ஆராயவும் அதிகாரிகளுக்கு கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

புதுவை முத்தியால்பேட்டை எம்எஸ்.அக்ரஹாரம் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு நேற்று மாலை மின்சார வயர் அறுந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிலிருந்த 4 பேர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தெய்வானை, கணேஷ் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 2 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அதிமுக கிழக்கு மாநில துணை செயலாளரும், முத்தியால்பேட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன், பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகளுடன் உப்பளம் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டார். இறந்துபோன 2 பேரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களுடன் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

புதுவை அரசையும், மின்துறையையும் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வையாபுரிமணி கண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த கண்காணிப்பு பொறியாளர், "இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரணம் வழங்குவது குறித்து அரசுக்கு உரிய பரிந்துரை செய்யப்படும்" என தெரிவித்தார்.

அப்போது வையாபுரி மணிகண்டன், "2017ல் அக்ரஹாரம் பகுதியில் புதைவட கேபிள் அமைக்க கோப்பு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின் கரோனா ஊரடங்கால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணிகளை 10 நாட்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி முழுவதும் மின்கம்பிகள் சீராக உள்ளதா என ஆய்வு நடத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையடுத்து, "10 நாட்களில் அப்பகுதியில் புதைவட கேபிள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், தொகுதி முழுவதும் மின்துறை அதிகாரிகளை கொண்டு மின்கம்பிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என்று கண்காணிப்பு பொறியாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in