Published : 21 Jun 2022 07:53 PM
Last Updated : 21 Jun 2022 07:53 PM

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு: கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

சென்னை: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் "தனிநாயகம் அடிகள் , பேரறிஞர் அண்ணா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டு கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்டது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமாகும்.

தமிழில் உயர் ஆய்வுகளை செய்து கருவி நூல்களை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். இப்பணியினை இந்நிறுவனம் சிறப்பாக செய்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிறுவனத்தின் ஆய்வுச் சூழல் முற்றிலும் முடங்கிப் போனது. நிறுவனத்தின் ஆய்விற்கு தொடர்பில்லாத திருக்குறள் காட்சிக் கூடம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் போன்றவற்றை திணித்து ஆய்வு நிறுவனத்தை கண்காட்சிக் கூடமாக மாற்றியதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி முற்றிலும் தடைப்பட்டு போனது.

தற்போது, பல ஆய்வுகள் இருக்கைகளை உருவாக்கி முறையற்ற வழியில் அரசு மற்றும் நிறுவனத்தின் லட்சினையை பயன்படுத்தி சான்றிதழ்கள் வழங்குவது, திருமூலர் ஆய்வறிக்கையின் மூலம் தமிழகம் முழுவதும் வகுப்புகள் எதுவும் நடத்தாமல் முறையற்ற வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இப்படி பல்வேறு நிர்வாக சீர்கேடுகளால் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தன் பெருமையை இழந்து நிற்கிறது.

முதல்வர் இந்நிறுவனத்தை உயர் ஆய்வு நிறுவனமாக மாற்றுவதற்கும், இதுகாறும் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தி அக்குழு அளிக்கும் சிபாரிசுகள் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் சிறப்பாக செயல்பட, இந்நிறுவனத்திற்கு இயக்குநராக மூத்த பேராசிரியர் ஒருவரையே நியமிப்பது பொறுத்தமானதாக இருக்கும். மேலும் நிறுவன வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதுடன், மாணவர்கள் விடுதியில் உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மாணவர்கள் ஆய்வு செய்வதற்கான நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x