Published : 21 Jun 2022 05:47 PM
Last Updated : 21 Jun 2022 05:47 PM

தாமதம் காரணமாக முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட மதிப்பு ரூ.1,685 கோடியாக உயர்வு

மதுரை: முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர் குழாயில் குடிநீரின் "ப்ரஷர்" பரிசோதனையை ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் நேரில் சென்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தார், இந்த திட்டப் பணிகள் தாமதமாவதால் ரூ.1205.76 கோடியில் தொடங்கிய இந்தத் திட்டத்தின் மதிப்பீடு தற்போது ரூ.1685.76 கோடியாக உயர்ந்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 371 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது வைகை அணை மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து 192 எம்எல்டி குடிநீர் மட்டுமே பெறப்படுகிறது. இந்தக் குடிநீர் போதாததால் மதுரை மாநகராட்சியல் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தக் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.1205.76 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால், இந்த திட்டம் தொடங்குவதில் தாமதம், அதன்பிறகு கரோனாவால் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஓர் ஆண்டு நிறுத்தப்பட்டது உள்ளிட்ட பின்னடைவால் இந்த திட்டத்தின் மதிப்பீடு தற்போது ரூ.1685.76 கோடியாக உயர்ந்தது.

இந்தத் திட்டத்தில் மதுரைக்கு குடிநீர் கொண்டு வருவற்கு முல்லைப் பெரியாறு அணை அருகே லோயர் கேம்பில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. அங்கிருந்து எடுக்கப்படும் சுத்திக்கரிக்கப்படாத குடிநீர் தேனி மாவட்டம் பன்னைப்பட்டிக்கு கொண்டு அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக பன்னைப்பட்டியில் பிரமாண்டமான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரைக்கு நேரடியாக வரும் முல்லைப் பெரியாறு குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க மாநகராட்சி 100 வார்டுகளில் 37 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் 2021-ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், நிதி ஒதுக்கீடு, டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால் தாமதமாகவே திட்டம் தொடங்கியது. தற்போது 2023-ம் ஆண்டிற்கு முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிகள் மெதுவாக நடப்பதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் கடந்த மாநராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டினர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்க முடியாமல் திணறினர்.

தற்போது புதிதாக வந்துள்ள மாநகராட்சி ஆணையாளர் சிம்மரன் ஜித் சிங் காலோன், அதிகாரிகளை நம்பாமல் நேரடியாக முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடக்கும் இடங்களை ஆய்வு செய்தார்.

இதில், பண்ணைப்பட்டியில் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தவர், அதன்பிறகு அங்கிருந்து மதுரை வரை அமைக்கப்படும் குடிநீர் குழாய்களையும், அதன் ப்ரஷரையும் ஆய்வு செய்தனர். அப்போது பண்ணைப் பட்டியில் இருந்து மதுரைக்கு அமைக்கப்படும் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் குடிநீரின் "பரஷர்"-ஐ ஆய்வு செய்தார். இதில், குடிநீர் மாநகராட்சி அதிகாரிகள் எதிர்பார்த்த "ப்ரஷர்" வெற்றிகரமாக நடந்தது.

குழாயில் உள்ள தண்ணீரை திறந்துவிட்டு ஆய்வு செய்ததில் பல அடி உயரத்திற்கு வானத்ததை நோக்கி ப்ரீட்டு வெளியேறியது. இதே "ப்ரஷர்" வேகத்தில் குடிநீர் வந்தால் மதுரைக்கு தடையின்று பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x