Published : 14 May 2016 02:43 PM
Last Updated : 14 May 2016 02:43 PM

தட்டிக் கழிக்கப்பட்ட கோரிக்கைகளே வாக்குறுதிகள்: அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து மாற்றுத் திறனாளிகள் விமர்சனம்

பல வருடங்களாக முன்வைத்து வரும் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றாமல், தற்போது பொதுவான தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிட்டிருப்பதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளின் சிறப்பம்சங்களை முன்னிலைப்படுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை இலவச அறிவிப்புகள் பெரும்பாலும் குறைந்திருந்தாலும், கட்சிகளின் ஒரு சில வாக்குறுதிகள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைப்பேசி, மகளிருக்கு சுய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வாங்க 50 சதவீத மானியம் உள்ளிட்ட அறிவிப்புகள் விமர்சனத்துக் குள்ளாக்கப்பட்டாலும் பெண்களிடமும், கிராமப்புற மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆனால், இவ்விரண்டு திட்டங்களையும் பல வருடங்களாக வலியுறுத்தி வருவதாகவும், நிதி உள்ளிட்ட காரணங்களினால் கண்டுகொள்ளப்படாத இத்திட்டங்கள் தேர்தலுக்காக மட்டும் எப்படி செயல்படுத்தப்படும் என மாற்றுத் திறனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து தேசிய பார்வையற் றோர் இணையத்துக்கான தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன் கூறியதாவது: 2001-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 16 லட்சம் பார்வையற்றோர், மற்ற மாற்றுத்திறனாளிகள் 7 லட்சம் என கணக்கெடுக்கப்பட்டது. இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொழில்களுக்குச் சென்று திரும்பும்போது, வழிதவறிச் செல்லும் போதும் தங்களது குடும்பத்தினரை, நண்பர்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக அனைவருக்கும் அரசு இலவச கைப்பேசி வழங்க வேண்டுமென தொடர்ந்து பல வருடங்களாக வலியுறுத்தி வருகிறோம். கைப்பேசி கேட்டு, சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி எங்களது கோரிக்கைகள் தட்டிக் கழிக்கப்பட்டன.

அதேபோல, நடக்க முடியாத, தவழ்ந்து செல்லக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஜின் பொருத்திய இருசக்கர வாகனம் வழங்க வேண்டுமென கேட்டிருந்தோம். ஆனால் வருடாவருடம் மாவட்டத்துக்கு தலா 10 பேருக்கு மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் வழங்க போதுமான நிதியில்லை எனக் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மக்கள்தொகையில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளே இருக்கும்போது, இவ்விரண்டு திட்டங்களும் பல வருடங்களாக நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. அப்படியிருக்கும்போது அனைத்து மக்களுக்கும், பெண்களுக்கும் இலவச செல்போன், 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனத்தை வழங்குவதாக அறிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

அதேபோல 2001-க்குப் பிறகு மாற்றுத் திறனாளிகள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. சரியான கணக்கெடுப்பு முடிவு வெளியிடப்பட்டிருந்தால், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளில் வசதிகளை செய்து கொடுக்க முடியும் என தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த தேர்தலுக்கு முன்பாவது மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு முடிவை வெளியிட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x