Published : 11 May 2016 06:29 PM
Last Updated : 11 May 2016 06:29 PM

தமிழக பிரச்சாரம் ரத்து: மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்ததற்காக தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநில மக்களிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோரியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்கதல் நடைபெறும் மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த 10-ம் தேதி புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரியிலும், 11-ம் தேதி கேரள மாநிலத்திலும் அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் செய்திருந்தனர்.

ஆனால், உடல்நிலை காரணமாக ராகுல் காந்தியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் பிரச்சாரம் செய்யப்பட்டதற்காக மக்களிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ''எதிர்பாராத விதமாக கடந்த 8-ம் தேதி எனக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் 10, 11 தேதிகளில் தமிழகம், கேரளம், புதுச்சேரியில் திட்டமிட்டபடி பிரச்சாரம் செய்ய முடியவில்லை. இதற்காக மூன்று மாநில மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட 3 மாநிலங்களிலும் மீண்டும் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய முந்தையச் செய்திகள்:

ராகுல் பிரச்சாரம் 13-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

முன்னதாக, நாகர்கோவிலில் காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம், நேற்று நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடக்க இருந்தது. இதற்கான பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியும் நடைபெற்றது.

ஆனால், அவருக்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு ராகுல் காந்தியின் பயணம் ரத்து செய்யப்பட்டு, 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்று இரவு 7.30-க்கு இதே மைதானத்தில் ராகுல் காந்தி பேசுகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

காரைக்காலில் கொலை மிரட்டலால் ராகுல் பிரசாரம் ரத்து

ராகுல் காந்திக்கு வந்த கொலை மிரட்ட லைத் தொடர்ந்து, நேற்று அவர் தேர்தல் பிரச்சாரத்துக்காக காரைக்காலுக்கு வருவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு மர்மக் கடிதம் வந்தது. அதில் ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. நாராயணசாமி புதுவை மாநில ஐஜி பிரவீர் ரஞ்சனிடம் முறையிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தியின் காரைக்கால் வருகை ரத்து செய்யப் பட்டதாக நாராயணசாமி அறிவித்தார். ஏற்கெனவே கடந்த ஆண்டு நாராயண சாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. தமிழ் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதி கரித்துள்ளது. இதுதொடர்பான விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ஐஜி பிரவீர் ரஞ்சன் கூறும்போது, "சுமைதூக்குவோர், கூலி தொழிலாளர்கள் என்று பெயரிட்டு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. கடிதம் கையால் எழுதப்பட்டிருந்தது. இதுதொடர் பாக விசாரணையை தொடக்கியுள்ளோம். இக்கடிதம் தன்வந்திரி நகர் தபால் நிலையத்தில் போடப்பட்டிருக்கிறது. அதற்கான அச்சு அதில் உள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x