

கோவை: கோவை காளப்பட்டியில் சாலையோர மரங்களை வெட்டியவர் மீது காவல்நிலையத்தில் வருவாய்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை காளப்பட்டி (மேற்கு) கிராம நிர்வாக அலுவலர் மு.பிரேமா பீளமேடு காவல்நிலையத்தில் நேற்று அளித்த புகார் மனுவில், “காளப்பட்டி சசி அவென்யூ பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக ஓசை சையது என்பவர் தொடர்புகொண்டு தெரிவித்தார்.
இதையடுத்து அந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டபோது 6 வேப்ப மரங்கள், ஒரு கொன்றை மரம், ஒரு பாதாம் மரம் ஆகியவை வெட்டப்பட்டிருந்தன. அரசுக்கு சொந்தமான இந்த மரங்களை வெட்டி எடுத்துச் சென்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.