

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த காவிரி நீரில் காரைக்காலுக்கு உரிய 9 டிஎம்சி நீரை வழங்காமல், காரைக்கால் மக்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா துரோகம் செய்ததாக மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளருமான வி.நாராயணசாமி கூறினார்.
காரைக்காலில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவுள்ள புதிய நகராட்சித் திடலை நேற்று பார்வையிட்ட வி.நாராயணசாமி, பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏ.வி.சுப்பிரமணியன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டனர்.
7-வது ஊதியக் குழு சம்பளத்தை அரசு ஊழியர்களுக்கு வழங்கவில்லை.
காரைக்கால் பகுதிக்கு தமிழகத்திலிருந்து மணல் கொண்டுவர முடியாமல் தடை செய்ததால், கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த காவிரி நீரில், காரைக்காலுக்கு உரிய 9 டிஎம்சி நீரை வழங்காமல், காரைக்கால் மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் தோற்பது உறுதி.
இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காரைக்காலில் பிரச்சாரம் செய்யவுள்ளார். எனவே, இத்தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது என்றார்.