

ஈரோடு: கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில், தனக்கு பதிலாக, தனது மகனை மருத்துவம் பார்க்க அனுமதித்த தலைமை மருத்துவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள ஈரோடு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவராக தினகர் பணியாற்றி வருகிறார்.மருத்துவமனையில், மேலும் 4 மருத்துவர்களும், 6 செவிலியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, முறையாக விடுமுறை எடுக்காமல், மருத்துவர் தினகர் மற்றும் செவிலியர்கள் ஒகேனக்கல் சுற்றுலா சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது தனக்கு பதிலாக மருத்துவம் பயின்று வரும் தனது மகன் அஸ்வினை, அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் சந்தேகமடைந்து, சமூக வலைதளங்களில் இந்த தகவலை வெளியிட்டு, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுப்பினர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு, மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குநர் கோமதிக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையில் மருத்துவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.